பதிவு செய்த நாள்
13
டிச
2024
11:12
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை திருவிழா 11 நாட்களுக்கு வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அதுபோல, இந்தாண்டு திருவிழா கடந்த டிச.5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி பிரகார உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று, (13ம் தேதி) திருக்கார்த்திகையை முன்னிட்டு, திருத்தேரோட்டத்தை முன்னிட்டு, தேர் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், கனமழை தொடர்ந்து பெய்ததால், தேரோட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் பக்தர்கள் மத்தியில் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழை காரணமாக, தேர் முழுவதும் நனைந்து காணப்படுவதாகவும், தேரை வடம் பிடித்து இழுத்து கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், தேரோட்டம் ரத்து செய்யப்பட உள்ளதாகவும், சுவாமி அம்பாளை மட்டும் தேரின் உச்சி பீடத்தில் வைத்து, இறக்கி விட கோவில் நிர்வாகம் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இதனால், பக்தர்கள் அதிருப்தியடைந்தனர். இதையடுத்து மழை பெய்யாத சூழலில், தேரோட்டத்தை ரத்து செய்வதா என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து மழை பெய்யாததால் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தொடர்ந்து இரவு தங்கமயில் வாகனத்தில் பிரகார உலாவும் அதனைத் தொடர்ந்து கார்த்திகை தீபக் காட்சியும் நடைபெறுகிறது.