சபரிமலையில் மண்டல காலத்தில் அதிகபட்ச மழை பதிவு; பக்தர்கள் சிரமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2024 08:12
சபரிமலை; சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல காலம் தொடங்கிய பின்னர் கடந்த இரண்டு நாட்களில் அதிகபட்ச மழை பதிவானது. எனினும் புல் மேடு – எருமேலி பாதைகளில் எவ்வித கட்டுப்பாடும் ஏற்படுத்தப்படவில்லை. டிச. 12 காலை 8:30 முதல் தொடங்கிய 24 மணி நேரத்தில் சபரிமலை சன்னிதானத்தில் 68.00 மி.மீ. மழை பதிவானது. இது இந்த சீசனில் அதிகபட்ச மழையாகும். நிலக்கல்லில் 73.00 மி.மீ மழை பதிவானது. நேற்று காலை 8:30 முதல் மதியம் 2:30 மணி வரை சன்னிதானத்தில் 14.6 மி.மீ. மழை பெய்தது. நிலக்கல்லில் 1.6 மி.மீ. , பம்பையில் 12.6 மி. மீ. மழையும் பதிவானது. மழையால் பம்பையில் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படாததால் பக்தர்களுக்கு கட்டுப்பாடு ஏற்படுத்தப்படவில்லை. தீயணைப்புத் துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் நதிக்கரையில் தயார் நிலையில் இருந்தனர். எருமேலி பெருவழிப் பாதையிலும், சத்திரம் - புல் மேடு பாதையிலும் எவ்வித கட்டுப்பாடும் ஏற்படுத்தவில்லை. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் மலையேறி வரும் பக்தர்கள் சிரமப்பட்டனர்.