இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாறு அருகில் உள்ள சத்திரம், புல்மேடு பாரம்பரிய காட்டு பாதையில் சபரிமலைக்கு சென்று வரலாம். அதே போல் புல்மேட்டில் இருந்து மகர ஜோதியை தரிசிக்கலாம். நாளை மகர ஜோதி தரிசனம் நடக்க உள்ள நிலையில், அதற்கு புல்மேட்டில் பக்தர்களுக்கு அனைத்து துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயாராக உள்ளன. புல்மேடு உள்பட பல்வேறு பகுதிகளில் 1400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். புல்மேடு, உப்புதரா, கோழிக்கானம், வாமனகுளம், வல்லக்கடவு, சப்பாத்து பாலம், கக்கி ஜங்ஷன் ஆகிய பகுதிகளில் போலீசார் சார்பில் அஸ்கா விளக்குகள், புல்மேட்டில் வனத்துறை சார்பில் பயோ கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. சத்திரம் - புல்மேடு காட்டு பாதையில் கோழிக்கானம் முதல் சன்னிதானம் வரை வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சத்திரம், கோழிக்கானம், வாமனகுளம், புல்மேடு, உப்புதரா ஆகிய பகுதிகளில் சுகாதார துறை சார்பில் மருத்துவ குழுக்கள், ஆம்புலன்ஸ் வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளன.குமுளி முதல் கோழிக்கானம் வரை மோட்டார் வாகன துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவதுடன் விபத்தில் சிக்கும் வாகனங்களை மீட்பதற்கு கிரைன் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோழிக்கானம் முதல் புல்மேடு வரை வருவாய்துறை சார்பில் தெரு விளக்குகள், புல்மேட்டில் பி.எஸ்.என்.எல். சார்பில் தற்காலிக டவர் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. புல்மேடு, பஞ்சாலிமேடு ஆகிய பகுதிகளில் பொதுப்பணி துறை சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.