சபரிமலை; ‘‘சபரிமலையில் மண்டல சீசனில் 29 நாட்களில், 22.67 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். 163.89 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது,’’ என, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறினார்.
சன்னிதானத்தில் அவர் கூறியதாவது: சபரிமலையில் மண்டல சீசன் தொடங்கி ஒரு மாதம் கடந்துள்ளது. அனைத்தும் சுமூகமாக நடக்கிறது. போலீசாரின் திட்டமிட்ட செயல்பாடு காரணமாக, 18 படிகளில் பக்தர்கள் வேகமாக ஏற்றப்படுவதால் நீண்ட நேரம் காத்திருப்பில்லாமல் தரிசனம் செய்து திரும்புகின்றனர். கடந்த, 29 நாட்களில் மொத்தம் 22 லட்சத்து, 67,956 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு இதே கால அளவில் 18 லட்சத்து, 16,913 பேர் தரிசனம் செய்தனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, 4.51 லட்சம் பேர் அதிகமாகும். மொத்த வருமானம் 163 கோடியே, 89 லட்சத்து 20,204 ரூபாய். கடந்த ஆண்டு, 141 கோடியே 12 லட்சத்து 97,723 ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, 22.76 கோடி ரூபாய் அதிக வருமானம் கிடைத்துள்ளது. அரவணை விற்பனையில், 82 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை விட இது, 17 கோடி ரூபாய் அதிகம். காணிக்கையாக, 52.27 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 9 கோடி ரூபாய் அதிகமாகும். டிச., 23, 24ல் சபரிமலையில் தேவசம்போர்டு மற்றும் போலீஸ் துறை சார்பில் கற்பூர ஆழி பூஜை நடைபெறும். டிச., 22 காலை 6:00 மணிக்கு ஆரன்முளாவில் இருந்து தங்கி புறப்படுகிறது. டிச., 25 மாலை 6:30க்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடைபெறும். டிச., 26-ல் மண்டல பூஜை நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.