பதிவு செய்த நாள்
14
டிச
2024
09:12
புதுச்சேரி; கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, புதுச்சேரியில் உள்ள சிவன் மற்றும் அம்மன் கோவில்களில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. புதுச்சேரியில் கார்த்திகை தீப திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. நேற்று மாலை குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் தீபம் ஏற்றினர். மேலும் நகரப்பகுதிகளில் உள்ள சிவன், முருகன், அம்மன் உள்ளிட்ட கோவில்களில் தீபங்கள் ஏற்றபட்டு, உற்சவ மூர்த்திகள் வீதி உலா வந்தனர். அதனை தொடர்ந்து, காந்தி வீதி, வேதபுரீஸ்வரர் கோவில், மிஷன் வீதி, காளத்தீஸ்வரன் கோவில், முத்துமாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில், சொக்கப்பனை ஏற்றப்பட்டது. அதேபோல, நேற்று பிரதோஷம் என்பதால், அதையொட்டியும் சிவன் கோவில்களில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
வில்லியனுார்; வில்லியனுார் கோகி லாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீபத்தை முன்னிட்டு நேற்று காலை 10:30 மணியளவில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகமும், மதியம் 12:00 மணியளவில் தீபாராதனையும், மாலை 5:30 மணியளவில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 6:00 மணியளவில் தீபம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் மாட வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.