பதிவு செய்த நாள்
14
டிச
2024
09:12
மேட்டுப்பாளையம்; மாதேஸ்வரன் மலையில் உள்ள மாதேஸ்வரன் கோவிலில், கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
மேட்டுப்பாளையம் காரமடை சாலையில், குட்டையூர் அருகே மாதேஸ்வரன் மலை உள்ளது. இம்மலை மீது மாதேஸ்வரன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றுவது வழக்கம். நேற்று கோவில் நடை திறந்து மாதேஸ்வர சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. காலையில் கோவில் முன்பு உள்ள தீப கம்பத்தில், பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு மலை உச்சி மீது வைத்துள்ள, பித்தளை கொப்பரையில், நெய் ஊற்றப்பட்டது. 100 மீட்டர் காடா துணியால், திரி செய்து கொப்பரையில் வைக்கப்பட்டது. சரியாக, 6:00 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபம்,11 நாட்களுக்கு எரிந்து கொண்டிருக்கும். விழாவில் எம்.எல்.ஏ., செல்வராஜ், அறங்காவலர் நியமன குழு உறுப்பினர் கவிதா கல்யாண சுந்தரம், நந்தகுமார், ஓம் நமச்சிவாயா அறக்கட்டளை நிர்வாகத்தினர் ஆகியோர் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, மாதேஸ்வர சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்பு வாணவேடிக்கை நடைபெற்றது.