பதிவு செய்த நாள்
17
டிச
2024
10:12
தேனி; மாவட்டத்தில் மார்கழி மாதப்பிறப்பையொட்டி பெருமாள் கோயில்களிலும் திருப்பாவை நோன்பு துவக்கி பாசுரங்கள் பாடி வழிபட்டனர். அல்லிநகரம் பெருந்தேவி தாயார் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் நேற்று மார்கழிப் பிறப்பை முன்னிட்டு, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடந்தன. பின் பெருமாளுக்கு புஷ்ப அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து அல்லிநகரம் சடகோப ராமனுஜ திருகோஷ்டியார் சார்பில் மார்கழி முதல் நாளுக்கான ஆண்டாள் பாசுரங்கள் முதல் 30 பாசுரங்கள் சேவிக்கப்பட்டன. பின் மார்கழி நோன்பின் சிறப்பு, மார்கழி பிறப்பு குறித்து திருகோஷ்டியாரின் செயலாளர் ரெங்கநாதன், ஆண்டாள் பாசுரங்கள் குறித்த உபன்யாசம் நடத்தினார். பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான வைணவ பக்தர்கள், பொது மக்கள் பங்கேற்றனர். பெருமாள் பூஜை,அலங்காரங்களை மோகன் பட்டர் செய்திருந்தார்.
தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் மாத பிறப்பை முன்னிட்டு நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டது. மூலவர் பெத்தாட்சி விநாயகர், சோமாஸ்கந்தர், கன்னி மூல கணபதி, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின், மார்கழி திருப்பாவை திருவெண்பாவை பஜனை பாடிக்கொண்டு, பெரியகுளம் தேனி ரோடு, எடமால் தெரு வழியாக கண்ணாத்தாள் கோயில் சென்றடைந்தனர். அதன்பின் பெத்தாட்சி விநாயகர் கோயில் திரும்பினர். அங்கு பாரஸ்ட் ரோடு தனியார் பள்ளி ஆசிரியை நாகமணி தலைமையில் மார்கழி ஆண்டாள் திருப்பாவை, திருவெண்பாவை பாசுரங்கள் பாடினார். பூஜைகள் நடந்தன. பிரசாதம் வழங்கப்பட்டன. பஜனை ஊர்வலம், சிறப்பு பூஜைகள் சிவச்சாரியார் கணேஷ் தலைமையில் நடந்தது.
போடி: மார்கழி திங்களை முன்னிட்டு போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் தங்க கவச அலங்காரத்தில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர். சுவாமி அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார். சுப்பிரமணியர் கோயிலில் முருகன் வள்ளி, தெய்வாணைக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் அமைந்துள்ள கீழச் சொக்கநாதர், மேலச் சொக்கநாதர் கோயில், கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயில், திருமலாபுரம் முத்துமாரியம்மன் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள சிவனுக்கும், பத்ரகாளிபுரம், விசுவாசபுரம் பத்ரகாளியம்மன் கோயிலில் உள்ள அம்மனுக்கும் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
கூடலழகிய பெருமாளுக்கு நீராட்டு விழா; கூடலுார்:- வரலாற்று சிறப்புமிக்க கூடலழகிய பெருமாள் கோயிலில் மார்கழி நீராட்டு விழா நேற்று துவங்கியது. அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்ஸவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். துளசி, தீர்த்த நீர், பொங்கல் வழங்கப்பட்டது.
பெரியகுளம்: வரதராஜப் பெருமாள் கோயிலில் மார்கழி மாதம் பிறப்பை முன்னிட்டு அதிகாலையில் வரதராஜப் பெருமாள், பெருந்தேவி தாயார், வீர ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், பன்னீர், மஞ்சள், சந்தனம் திருமஞ்சனம் பூஜை நடந்தது. கைலாசபட்டி கைலாசநாதர் கோயிலில் கைலாசநாதர், பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். பாலசுப்பிரமணியர் கோயில், பாம்பாற்று ராம பக்த ஆஞ்சநேயர் கோயில், லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், தேவதானப்பட்டி மூங்கிலனணை காமாட்சியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.