பதிவு செய்த நாள்
19
டிச
2024
11:12
வால்பாறை; வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில், மண்டல பூஜை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்ப சுவாமி கோவிலின், 38ம் ஆண்டு மண்டல பூஜைத்திருவிழா நேற்று காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அதன்பின், ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. தொடர்ந்து உற்சவர் ஐயப்ப சுவாமி கோவிலை மூன்று முறை வலம் வந்து, விநாயகர், முருகன், காசிவிஸ்வநாதரிடம் ஆசி பெற்றார். காலை, 10:00 மணிக்கு ராஜகுரு சுப்புராஜ் குருசாமி தலைமையில் திருக்கொடியேற்றப்பட்டது. விழாவில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மண்டல பூஜை திருவிழா நேற்று காலை, 9:30 மணிக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது, வானில் கருடன் மூன்று முறை கோவிலை சுற்றி வலம் வந்தது. இதை கண்ட ஐயப்ப பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என கோஷமிட்டனர். விழாவில் நாளை (20ம் தேதி) காலை, 10:15 மணிக்கு நடுமலை ஆற்றில் ஆராட்டுவிழா நடக்கிறது. தொடர்ந்து, 108 கலசங்களுடன் பக்தர்கள் புனித தீர்த்தம் கொண்டு வந்து, ஐயப்பனுக்கு அபிஷேக பூஜை நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு, 1008 தீபம் ஏற்றி, ஐயப்ப சுவாமிக்கு ஊஞ்சல் சேவை நடக்கிறது.
வரும், 21ம் தேதி காலை, 11:00 மணிக்கு அன்னதான விழாவும், மாலை 3:00 மணிக்கு புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து ஐயப்ப பக்தர்கள் பாலக்கொம்பு ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 22ம் தேதி காலை, 11:00 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு புஷ்பாஞ்சலி பூஜையும், மாலை, 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட் தேரில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை, அகிலபாரத ஐயப்ப சேவா சங்க தலைவர் மூர்த்தி, செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் அழகிரி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.