பதிவு செய்த நாள்
20
டிச
2024
04:12
வால்பாறை; கிராம கோவில் பூஜாரிகளுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் நிறைவடைந்ததையடுத்து, அவர்ககளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. உடுமலை சப்தரிஷிகளின் சர்வசாஸ்திர வித்ய பீடம் சார்பில், எளிய ஆகம துாப தீப ஆராதனை, அர்ச்சனை பயிற்சி முகாம் இரண்டாவது நாளாக வால்பாறையில் நடந்தது. வாழைத்தோட்டம் காமாட்சியம்மன் கோவில் வளாகத்தில் கிராம கோவில் பூஜாரிகளுக்காக இரண்டாம் நாள் பயிற்சி முகாமுக்கு, விஸ்வ ஹிந்த பரிஷத் தலைவர் நாட்ராயசாமி தலைமை வகித்தார். ஆன்மிக ஒருங்கிணைப்பாளர்கள் மருது, ஜெயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், உடுமலை சப்தரிஷிகளின் சர்வசாஸ்திர வித்ய பீடம் பிரதான ஆச்சாரியார் ஜெயபிரகாஷ் நாராயணன் சாஸ்திரி, பயிற்சி பெற்ற பூஜாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி, அவர் பேசியதாவது: கோவில்களை தினமும் காலை, மாலை சுத்தம் செய்து, சுவாமிக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடத்தப்பட வேண்டும். நலிவடைந்த கோவிலாக இருந்தால் கூட அந்த ஊர்பெரியவர்களை அழைத்து பேசி, கோவிலை அழகுபடுத்தி, பொதுமக்கள் உதவியுடன் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.
எந்த சூழ்நிலையிலும், கோவில்களை பூட்டி வைக்கக்கூடாது. வேதங்கள் முறைப்படி கற்று, அந்தந்த சுவாமிகளுக்கு உரிய மந்திரத்தை உச்சரித்து, பூஜைகள் செய்ய வேண்டும். செவ்வாய், வெள்ளிக்கிழமை நாட்களில் பக்திபாடல்களை பாடி இறைவனை மகிழ்விக்க வேண்டும். இதற்காக அந்த கிராமத்தில் உள்ள பக்தர்களை திரட்டி, இறைவனை வழிபடுவதன் அவசியம் குறித்து, விளக்கமளிக்க வேண்டும். கோவிலில் காலை, மாலை நேரங்களில் தவறாமல் பூஜை செய்ய வேண்டும். ஹிந்துக்களை ஒருங்கிணைக்க கோவில் ஒரு முக்கிய தலமாக உள்ளது என்பதை உணர்ந்து, சுவாமிக்கு எந்தவித குறையும் வைக்காமல் பூஜாரிகள் பூஜைகள் செய்ய வேண்டும். இவ்வாறு, பேசினார். பயிற்சி முகாமில், வால்பாறை நகராட்சி முன்னாள் கவுன்சிலர் சூரியபிரபா, ஆன்மிக ஒருங்கிணைப்பாளர் பொன்னான் மற்றும் கிராம கோவில் பூஜாரிகள் கலந்து கொண்டனர்.