பதிவு செய்த நாள்
20
டிச
2024
05:12
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அத்யயன உற்ஸவம் பகல்பத்து உற்ஸவத்துடன் டிச.31 ல் துவங்குகிறது. ஜன 10 நள்ளிரவில் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் அத்யயன உற்ஸவம் 20 நாட்கள் நடைபெறும். முதலில் பகல் பத்து உற்ஸவம் டிச.31ல் துவங்குகிறது. அன்று மாலை பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவியருடன் ஆண்டாள் சன்னதி எழுந்தருளுகிறார். தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடந்து பெருமாளுக்கு காப்புக் கட்டி உற்ஸவம் துவங்கும். தொடர்ந்து பூஜை, ஆராதனைகள் நடந்து பெரியாழ்வாருக்கு மரியாதை நடைபெறும். பின்னர் தினசரி காலையில் பெருமாள் ஆண்டாள் சன்னதி எழுந்தருளலும், மாலையில் திருவாராதனம், பெரியாழ்வாருக்கு மரியாதையும் நடைபெறும். பகல்பத்து நிறைவன்று ஜன.9ல் திருமங்கையாழ்வாருக்கு மோட்சம் அருளி, ஆழ்வார் திருவடி தொழுதல் நடைபெறும். பெருமாள் மோகினி அலங்காரத்தில் அருள்பாலிப்பார். பெருமாள் தென்னமரத்து வீதி எழுந்தருளி பகல் பத்து உற்ஸவம் நிறைவடையும்.
ஜன.10 ல் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு காலையில் சயன கோலத்திலும், மாலையில் ராஜாங்க அலங்காரத்தில் அமர்ந்த கோலத்திலும் அருள்பாலிப்பர். பின்னர் இரவில் ஏகாந்த அபிஷேகம் நடந்து சிறப்பு அலங்காரத்தில் தங்கப்பல்லக்கில் பெருமாள் ஸ்ரீ தேவி பூதேவியருடன் ஆண்டாள் சன்னதி எழுந்தருளி வேத விண்ணப்பம் செய்யப்படும். ஆழ்வாருக்கு மரியாதை அளிக்கப்பட்டு நம்மாழ்வருக்கு காட்சி அளித்து பரம பத வாசலை கடந்து சென்று அருள்பாலிப்பர். பின்னர் முன் மண்டபம் எழுந்தருளி நம்மாழ்வாருக்கு மரியாதை அளிப்பார். தொடர்ந்து பத்தி உலாத்துதல் நடைபெறும். பின்னர் தாயார் சன்னதி எழுந்தருளி ராப்பத்து உற்ஸவம் துவங்கும். தினசரி பெருமாள் தாயார் சன்னதி எழுந்தருளி சொர்க்கவாசலை கடந்து செல்வது நடைபெறும். ஜன.19 ல் ராப்பத்து உற்ஸவம் நிறைவடையும்.