திருப்பூர்; திருப்பூரில் நாளை நடைடெற உள்ள மங்கள வேல் பூஜையொட்டி பக்தர்களுக்கு வழங்க பிரசாதம் தயார் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், வேல் வழிபாடு நிகழ்ச்சி கடந்த மாதம் துவங்கியது. ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையில் வேல் வழிபாடு நடக்கிறது. கொங்கு மண்டலத்தின் ஏழு திருத்தலங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட மங்கள வேல் வாகனத்தில் எடுத்துவரப்பட்டு, திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் மக்கள் தரிசனத்துக்காக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக, திருப்பூர் மாநகரில் மக்கள் தரிசனத்துக்காக மங்கள வேலுடன் கூடிய வாகனம் வலம் வந்தது. நாளை கொங்கணகிரி முருகன் கோவிலில் மங்கள வேலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பின், அலகுமலையில் மங்கள வேல் வழிபாட்டு பூஜை நடக்கிறது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக தேவையான முன்னேற்பாடுகள் நேற்று நடந்தது. பிரசாதம் தயார் செய்யும் பணி தாராபுரம் ரோட்டில் நேற்று மும்முரமாக நடந்தது. ஹிந்து அன்னையர் முன்னணி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.