திருநெல்வேலி: கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு நெல்லை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் நேற்று சொக்கப்பனை தீபம் ஏற்பட்டது. கார்த்திகை தீபத் திருநாளான நேற்று முன்தினம் இரவு நெல்லையப்பர் கோயில் உட்பட பல்வேறு சிவன் கோயில்களிலும் சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபத் திருநாளின் 2ம் நாளான நேற்று பெருமாள் கோயில்களில் சொக்கப்பனை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. பாளை.,ராமசாமி கோயிலில் சுவாமிக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடந்தது. இரவு மங்கள வாத்தியங்கள் முழங்க கோயில் முன் சொக்கப்பனை தீபம் ஏற்பட்டது. இதனையடுத்து சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் சாமித்துரை பாண்டியன், ஆய்வர் சுப்பிரமணியன் மற்றும் பாளை., பகுதி பக்தர்கள் பங்கேற்றனர். இதுதவிர பாளை., ராஜகோபால சுவாமி கோயில், மேலத் திருவேங்கடநாதபுரம் பெருமாள் கோயில், டவுன் கரியமாணிக்க பெருமாள் கோயில், டவுன் மயில்வண்ணநாதர் கோயில், திம்மராஜபுரம் வெங்கடாஜலபதி கோயில், கொக்கிரகுளம் பெருமாள் கோயில் உட்பட பல்வேறு பெருமாள் கோயில்களில் நேற்று சொக்கப்பனை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.