பதிவு செய்த நாள்
29
நவ
2012
11:11
திருச்சி: ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் உள்ளிட்ட அனைத்து திருத்தலங்களில் சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் கோலாகலமாக நடந்தது. அடிமுடி இல்லாத அருட்பெருஞ்ஜோதியானவர் இறைவன் என்பதை உணர்த்தும் வகையில், திருக்கார்த்திகை மாதம் வரும் முழுப் பவுர்ணமி நாளில், கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. மலைக்கோட்டை உள்ளிட்ட மலைக்கோவில்கள் கார்த்திகை தீபமும், சில சிவன் மற்றும் முருகன் கோவில்களில் நேற்று முன்தினம் சொக்கப்பனையும் கொளுத்தப்பட்டது. நேற்று இரவு, 8 மணியளவில், பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தமான திருவானைக்காவல் கோவிலில், ஜம்புகேஸ்வரருக்கு கார்த்திகை கோபுரம் முன், அகிலாண்டேஸ்வரிக்கு, சன்னதி எதிரே, குபேரலிங்கேஸ்வர் சன்னதி முன் என, மூன்று சொக்கப்பனைகள் கொளுத்தப்பட்டன. ஏராளமாக பக்தர்கள் பங்கேற்று, சொக்கப்பனை நிகழ்வை கண்டுகளித்தனர். அதைத்தொடர்ந்து, ஸ்வாமியும், அம்மனும் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதேபோல, அனைத்து சிவன், முருகன், அம்மன் கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
ஸ்ரீரங்கம்: திருக்கார்த்திகையையொட்டி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், சொக்கப்பனை கண்டருள நம்பெருமாள், மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் முன்னர், கோவில் தங்ககொடிமரம் அருகே, உத்தமநம்பி ஸ்வாமிகள் இடைவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு, 8 மணிக்கு, மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு, கார்த்திகை கோபுரம் வந்தடைந்தார். சொக்கப்பனை பந்தலை வலம் வந்து, சக்கரதாழ்வார் சன்னதி எதிரே நம்பெருமாள் காத்திருக்க, இரவு, 8.45 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து நந்தவனம் வழியே தாயார் சன்னதிக்கு சென்ற நம்பெருமாளுக்கு, "திருவந்தி காப்பு எனப்படும் திருஷ்டி கழிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு, 9.15 மணிக்கு, சந்தன மண்டபம் சென்ற நம்பெருமாள் முன், 9.45 மணிக்கு, "திருமுகப்பட்டயம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள் குறித்து படிக்கப்பட்டது. இரவு, 10.15 மணிக்கு, நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார். ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் கல்யாணி, அறங்காவலர்கள் ரங்காச்சாரி, சீனிவாசன், கஸ்தூரி, பரம்பரை சுழல்முறை அறங்காவலர் பராசர பட்டர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.