பதிவு செய்த நாள்
26
டிச
2024
10:12
சென்னை; மகா கும்பமேளாவில், பங்கேற்க செல்லும் தமிழக பக்தர்களுக்காக, 400 தற்காலிக சொகுசு குடியிருப்புகளை ஐ.ஆர்.சி.டி.சி., அமைத்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா நடக்கிறது. இது, உலகின் மிகப்பெரிய ஆன்மிக, கலாசார மற்றும் மத நிகழ்வுகளில் ஒன்றாக விளங்குகிறது. இந்நிலையில், பிரயாக்ராஜில் வரும் 2025 ஜன., 13ம் தேதி முதல் பிப்., 26 வரை மகா கும்பமேளா 45 நாட்கள் நடக்க உள்ளது. இதில், 43 கோடி பக்தர்கள் பிரயாக்ராஜ் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்த மாநில அரசு, மத்திய அரசின் துறைகளோடு இணைந்து மேற்கொண்டு வருகிறது. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி.யின் தென்மண்டலம் சார்பில், தமிழக பக்தர்களுக்காக தற்காலிக குடியிருப்புகள் உள்ளிட்ட வசதிகளை மேற்கொண்டு வருகிறது.
இது குறித்து, ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரிகள் கூறியதாவது: மகா கும்பமேளாவில் செல்லும் பக்தர்களுக்காக, தனியாக சுற்றுலா சிறப்பு ரயில்கள் இயக்கம், தற்காலிக, சொகுசு குடியிருப்புகள் அமைத்து வருகிறோம். மகா கும்பமேளா நடக்கும் திரிவேணி சங்கமத்தில் இருந்து 3.5 கி.மீ., துாரத்தில் பிரயாக்ராஜில் 400 சொகுசு குடியிருப்புகளை அமைத்துள்ளோம். 300 டீலக்ஸ் குடியிருப்புகளும், 100 பிரிமீயம் பிரிவில் குடியிருப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆரம்ப கட்டணம் 16,200 ரூபாய். உணவுகள், பெட் வசதி, கழிப்பறை வசதி, ‘சிசிடிவி’ கேமரா பாதுகாப்பு உள்ளிட்டவை இருக்கும். இது குறித்து மேலும் தகவல் பெற, 8076025236 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது https://www.irctctourism.com/mahakumbhgram என்ற இணையதளத்தில் பார்வையிடலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.