திருக்கனுார்; திருக்கனுார் வக்ரகாளியம்மன் வழிபாடு தலைமை நற்பணி மன்றம் சார்பில், 1,008 பால்குட ஊர்வலம் நடந்தது. திருக்கனுார் முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து உலக நன்மைக்காகவும், ஊர் செழிப்பாக இருக்க வேண்டியும் ஆண்டுதோறும் ஊர்வலமாக சென்று திருவக்கரை வக்ரகாளியம்மனுக்கு 1,008 பால்குடம் அபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி 24ம் ஆண்டு 1,008 பால்குடம் ஊர்வலம் மற்றும் அபிஷேகம் நேற்று நடந்தது. அதில், திருக்கனுார் முத்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பால்குடங்களுடன் ஊர்வலமாக திருவக்கரைக்கு சென்று வக்கிரகாளியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இதில், நற்பணி மன்ற நிர்வாகிகள்,பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பால்குட ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு திருவக்கரையில் அன்னதானம் வழங்கப்பட்டது.