பதிவு செய்த நாள்
29
நவ
2012
11:11
ராஜபாளைம்: சபரிமலை சீசன் துவங்கியதால், விருதுநகரில் இருந்து செங்கோட்டைக்கு, இரவு சிறப்பு ரயில் துவக்கவேண்டும். செங்கோட்டையில் இருந்து அச்சன்கோவில், புனலூர் வழியாக சபரிமலை செல்வது வழக்கம். தங்கள் வசதிக்கேற்ப, கார், வேன், பஸ்களில் பக்தர்கள் செல்கின்றனர். வசதியில்லாதவர்கள் சென்னையில் இருந்து ரயிலில் மதுரை வருகின்றனர், அங்கிருந்து செங்கோட்டை செல்கின்றனர். செங்கோட்டையில் இருந்து தமிழகம், கேரள அரசு பஸ்கள் மூலம் சன்னிதானம் செல்கின்றனர். பஸ் கட்டணத்தை விட மூன்றுமடங்கு குறைவு என்பதால், மதுரை-செங்கோட்டை ரயிலில் ஏற்கனவே பயணிகள் கூட்டம் அதிகம். இந்நிலையில், சபரிமலை பக்தர்களும் சேர்ந்தால், நெரிசல் அதிகம் உள்ளது. இதைதவிர்க்க, சபரிமலை பக்தர்கள் வசதிக்காக, சிறப்பு இரவு ரயில் போக்குவரத்து அவசியமாகிறது. விருதுநகர்-செங்கோட்டைக்கு ஒருவழி ரயில்பாதை தான் உள்ளது. இடையில் உள்ள ஸ்டேஷன்களில் இருவழிபாதை உள்ளன. இரவில், சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் சென்றவுடன், விருதுநகர்-செங்கோட்டை வழியில் ரயில்போக்குவரத்து இல்லை. இந்த நேரத்தில், விருதுநகர்-செங்கோட்டை மற்றும் மறுமார்க்கத்தில் ரயில் போக்குவரத்தை துவக்கினால், பக்தர்களுக்கு வசதியாக இருக்கும். குறைந்த கட்டணத்தில், செங்கோட்டை வரை செல்லும் வாய்ப்பு கிடைக்கும். ஸ்ரீஐயப்ப தர்மசேவா சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.பொன்னுசாமி, ""விருதுநகரில் இருந்து தென்காசி வரை உள்ள பக்தர்களுக்கு பஸ்சில் செல்வதை விட ரயில்போக்குவரத்து தான் வசதியாக உள்ளது. பக்தர்கள் நலன்கருதி இதை உடனே துவக்க, ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார்.