பதிவு செய்த நாள்
27
டிச
2024
02:12
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பக்தர்கள், செய்தியாளர்கள், பட்டர்கள் அலைபேசி, கேமரா மூலம் வீடியோ, போட்டோ எடுப்பதற்கு தடை விதிக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
108 வைணவ தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய தற்போது தமிழகத்தையும் கடந்து கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்கள் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். மேலும் கவர்னர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், அரசு துறை உயர் அதிகாரிகள், மாவட்ட நீதிபதிகள் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என வி.ஐ.பி.கள் வருகையும் அதிகரித்து வருகிறது. பல்வேறு மடங்களின் ஜீயர்களும் கோயிலுக்கு வருகின்றனர். இந்நிலையில் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அலைபேசிகள் மூலம் போட்டோ எடுப்பது மட்டுமில்லாமல் வீடியோ கால் மூலம் வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் உறவினர்களுக்கும் வீடியோ எடுக்கின்றனர். மேலும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடக்கும் போது சுவாமி தரிசனம் செய்வதை விட்டுவிட்டு அலைபேசி மூலம் போட்டோ மற்றும் வீடியோ எடுக்கின்றனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் 15 அன்று திருப்பாவை திவ்ய பாசுரம் நிகழ்ச்சிக்கு வருகை தந்த இசைஞானி இளையராஜா அர்த்தமண்டபத்திற்குள் நுழைந்ததாக சர்ச்சை வீடியோ வெளியானது. இதனையடுத்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் அலைபேசி மற்றும் கேமராக்கள் மூலம் போட்டோ வீடியோ எடுப்பதற்கு கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. திருச்செந்தூர், பழனி கோயில்களில் உள்ளது போல் பக்தர்களின் அலைபேசிகளை வாங்கி வைத்துவிட்டு சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்த பின்பு திரும்ப கொடுப்பதற்காக உரிய ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. மேலும் இதுவரை வி.ஐ.பி.க்கள் வருகையின் போது வெள்ளிக் குறடு மண்டபம் வரை செய்தியாளர்கள் வீடியோ, போட்டோ எடுத்து வந்தனர். இனிமேல் கொடிமரம் வரை மட்டுமே போட்டோ, வீடியோ எடுக்க செய்தியாளர்களை அனுமதிக்கவும், இதே போல் ஆண்டாள், ரங்க மன்னார் சிறப்பு பூஜைகளின் போது கோயில் பட்டர்கள் சிலர் அதனை போட்டோ எடுத்து தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கவும் கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.