பழநியில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29டிச 2024 06:12
பழநி; பழநி கோயிலுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை, ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததால் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
பழநி கோயிலில் அரையாண்டு தேர்வு விடுமுறை, ஞாயிறு விடுமுறை தினத்தை தினத்தை முன்னிட்டு தரிசனம் செய்ய அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிந்தனர். வின்ச், ரோப்கார் மூலம் செல்ல பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். காலையில் வெளிப்பிரகாரத்தில் கோயிலை சுற்றிலும் கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். படிப்பாதையில் அலைபேசி சோதனை செய்யும் இடத்தில் பக்தர்கள் அதிகமாக குவிந்தனர். ஐயப்ப, மேல்மருவத்தூர், தைப்பூச பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. தரிசனம் செய்ய பக்தர்கள் நான்கு மணி நேரம் வரிசையில் காத்திருந்தனர்.
வெளிப்பிரகாரத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் குடை பிடித்து நின்றிருந்தனர் குழந்தைகள் சிரமம் அடைந்தனர். படிப்பாதையில் பக்தர்கள் குழுவாக நிறுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர். பழனி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரி என்.சி.சி., மாணவர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மலைக்கோயிலில் கைக்குழந்தைகளுக்கு பால் இலவசமாக கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. இந்த வழி தவறிய பக்தர்களை கண்டறிய ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் வழங்கப்பட்டன. கிரி வீதியில் மேளதாளத்துடன் பக்தர்கள் காவடி எடுத்து அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தி வலம் வந்தனர். கிரிவீதியில் போதுமான அளவு இலவச பேட்டரி கார், பஸ் வசதி இல்லாததால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர். பாதயாத்திரை பக்தர்களிடம் வடமாநில நபர்களின் குழந்தைகள் யாசகம் கேட்டு தொந்தரவு செய்தனர். பாத விநாயகர் கோயில் அருகே தட்டு வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.