ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் திருவாடுதுறை ஆதீனம் சாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30டிச 2024 04:12
மயிலாடுதுறை; ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் தனுர் மாதத்தை யொட்டி திருவாடுதுறை ஆதீனம் சாமி தரிசனம் செய்தார். இதில் திரளான பக்தர்களுக்கு கலந்து கொண்ட ஆசி பெற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில் வாள்நெடுங்கன்னி அம்மன் உடனாகிய தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. சோழ மன்னர்களில் ஒருவரும் 63 நாயன்மார்களில் ஒருவருமான கோச்செங்கட் சோழ மன்னரால் அமைக்கப்பட்ட மாட கோவில்களில் ஒன்றான இந்த கோவில் சுவாமி தானாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் கோவிலில் 63 நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இந்த பிரசித்தி பெற்ற கோவிலில் தனுர் மாதத்தை யொட்டி திருவாடுதுறை ஆதீனம் 24 -வது குரு மகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக மங்கல இசை முழங்க பூரண கும்பம் மரியாதையுடன் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து திருவருளையும், குருவருளையும் பெற்றனர்.