பதிவு செய்த நாள்
31
டிச
2024
12:12
அவிட்டம்: எச்சரிக்கை அவசியம்
சகோதர, தைரிய வீரிய காரகனான செவ்வாய் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2 ம் பாதங்களான மகரத்தில் பிறந்தவர்களுக்கும், 3,4 ம் பாதங்களான கும்பத்தில் பிறந்தவர்களுக்கும் சனி பகவானே ராசி நாதனாவார்.
2025 ம் வருடத்தில் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் முற்பகுதி மிக யோகமாக இருக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து, புகழ், சொத்து, சுகம் கிடைக்கும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம சனியின் காலம் என்றாலும், வருடத்தின் முற்பகுதியில் குருவின் பார்வைகளும், பிற்பகுதியில் 5 ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவும் அதிர்ஷ்ட வாய்ப்புகளை அள்ளித் தருவார். ராசிக்குள் சஞ்சரிக்கும் சனி, ராகுவையும் தன் பார்வையால் பார்த்து அவர்களால் ஏற்படும் நெருக்கடிகளில் இருந்து பாதுகாப்பார்.
சனி சஞ்சாரம்: அவிட்டம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பாத சனியாக, குடும்பத்தில் குழப்பங்களை ஏற்படுத்துவார், 4,8 ம் இடங்களைப் பார்த்து ஆரோக்கியத்தில் பின்னடைவை ஏற்படுத்துவார்.
3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம சனியாக, நட்பு, வாழ்க்கைத்துணையுடன் இணக்கமற்ற நிலையை ஏற்படுத்துவார். வியாபாரம் தொழிலில் நெருக்கடியை அதிகரிப்பார் என்றாலும், பிப். 13 - மார்ச். 29, ஜூலை 23 - நவ. 18 ஆகிய அஸ்தமன, வக்கிர காலங்களில் சங்கடங்களில் இருந்து விடுதலை உண்டாகும். நெருக்கடி விலகி சுபிட்சமான பலன் உண்டாகும்.
ராகு, கேது சஞ்சாரம்: மே 25 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரித்து, மே 26 முதல் ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரிப்பதால் 1,2 பாதங்களில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் முற்பகுதியில் முயற்சி வெற்றியாகும். நினைத்ததை சாதிக்கும் சக்தி உண்டாகும். தெய்வ அருளும் பெரிய மனிதர்கள் ஆதரவும் கிடைக்கும். பிற்பகுதியில் நெருக்கடி அதிகரிக்கும். உடல்நிலையில் உபாதைகள் தோன்றும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வருடம் முழுவதும் அனைத்து வேலைகளிலும் நிதானம் அவசியம். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும், ஒழுக்கமுடன், ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நன்மையாகும்.
குரு சஞ்சாரம்: பிப். 10 வரை ரிஷபத்தில் வக்ரமாக உள்ள குரு, பிப். 11 முதல் வக்ர நிவர்த்தியாகி ரிஷபத்திலேயே சஞ்சரிக்கிறார். தொடர்ந்து மே 11 முதல் மிதுன ராசிக்குள் பிரவேசிப்பவர் அக்.8 முதல் கடகத்தில் சஞ்சரிப்பார். இதனால், 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் முற்பகுதியிலும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் பிற்பகுதியிலும் 5ம் இட குருவால் நன்மை அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். பயம் போகும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். வேலை வாய்ப்பு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம், சொந்த வீடு, வாகனம் என தேவை பூர்த்தியாகும். வியாபாரம், தொழில், உத்தியோகம் முன்னேற்றமடையும். செல்வாக்கு உயரும்.
சூரிய சஞ்சாரம்: அவிட்டம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 15 - ஏப். 13, ஜூன் 15 - ஜூலை 16 காலங்களிலும், அக். 18 - டிச. 15 காலத்திலும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, ஜன. 1 - 13, ஏப். 14 - மே 14, ஜூலை 17 - ஆக. 16, நவ. 17 - டிச. 31 காலங்களிலும், சூரியனின் சஞ்சார நிலைகள் உங்களுக்கு சாதகமான பலன்களை வழங்கும். எல்லாவித நெருக்கடிகளில் இருந்தும் உங்களைப் பாதுகாக்கும். உங்கள் முயற்சிகளை வெற்றியாக்கும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் லாபத்தை அதிகரிக்கும். உடல் பாதிப்பு, வியாபாரத்தில் போட்டி, எதிர்ப்பு என்றிருந்த நிலை மாறும்.
பொதுப்பலன்: 2025 ல் எத்தனை நெருக்கடி வந்தாலும் அவற்றில் இருந்து வெளியில் வருவீர்கள். குரு பகவானின் சஞ்சார நிலையும், பார்வைகளும், வருடத்தின் 4 மாதங்களில் சூரியனின் சஞ்சாரமும் உங்கள் நிலையை உயர்த்தும். நினைத்த வேலைகளை நடத்தி வைக்கும். முயற்சி வெற்றியாகும். வீட்டில் சுப காரியங்களை நடத்தி வைக்கும். சிலருக்கு புதிய தொழில் அமைத்துக் கொடுக்கும்.
தொழில்: தொழில் காரகனான சனியே ராசியாதிபதியான உங்களுக்கு, தொழிலில் அக்கறை அதிகரிக்கும். விவசாயம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், மெடிக்கல், கெமிக்கல், உணவகம், ரசாயனம், ஆயில் ஸ்டோர், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், பேக்டரி, டிராவல்ஸ், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், ஏற்றுமதி இறக்குமதி, ஆன்லைன் வர்த்தகத்தில் லாபம் அதிகரிக்கும்.
பணியாளர்கள்: வேலையில் நெருக்கடிகள் விலகும். செல்வாக்கு உயரும். சிலருக்கு வருடத்தின் முற்பகுதியிலும், சிலருக்கு பிற்பகுதியிலும் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொறுப்பு கிடைக்கும். ஊதியம் உயரும்.
பெண்கள்: இந்த வருடம் சிலருக்கு வருடத்தின் முற்பகுதியிலும், மற்றவர்களுக்கு பிற்பகுதியிலும் குரு பகவானால் படிப்பு, வேலை வாய்ப்பு, திருமணம். குழந்தை என யோகம் உண்டாகும். குடும்பத்தில் நெருக்கடி நீங்கும். கணவரின் அன்பு கூடும். சொத்து, வாகனம், வீடு, பொன் பொருள் சேரும்.
கல்வி: உங்கள் கவனம் படிப்பில் இருப்பது அவசியம். தேர்வு வரையில் நட்பு, வேறு சிந்தனைகளுக்கு இடம் தராமல் எதிர்காலத்தை மனதில் வைத்து படியுங்கள். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படுவது நன்மை தரும்.
உடல்நிலை: சனி, கேது சஞ்சாரத்தால் உடல்நிலையில் எதிர்பாராத பாதிப்பு ஏற்படும், நன்றாக இருந்ததுபோல் இருந்த நிலையில் திடீர் மாற்றம் உண்டாகும். விபத்து, தொற்று, பரம்பரை நோய் என ஏதேனும் ஒரு பாதிப்பால் மருத்துவச்செலவு கூடும். சிலர் அறுவை சிகிச்சை செய்துகொண்டு மீண்டு வருவீர்கள்.
குடும்பம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர்கள். தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடந்தேறும். புதிய சொத்து, பொன், பொருள் சேரும். சிலர் புதிய வீடு கட்டி குடியேறுவர்.
பரிகாரம்: அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வர சங்கடம் தீரும். நன்மை மேலோங்கும்.
சதயம்: நெருக்கடி நீங்கும்
சனி, ராகு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு பிறக்கும் 2025 ம் வருடம் முன்னேற்றமான ஆண்டாக இருக்கும். நெருக்கடிகளில் சிக்கி அவதிப்பட்டு வந்த உங்கள் நிலை மாறும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும். புதிய பாதை தெரியும். குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சியால் எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து, புகழ், சொத்து, சுகம் கிடைக்கும்.
சனி சஞ்சாரம்: ஜென்ம சனியாக ஏழரை சனியின் மத்திம காலத்திய பலன்களை வழங்கிடும் சனி பகவான், நண்பர்களிடம் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்துவார். வாழ்க்கைத்துணைக்கும் உங்களுக்குமிடையே இடைவெளியை அதிகரிப்பார். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்துவார். என்றாலும் பிப். 13 - மார்ச். 29, ஜூலை 23 - நவ. 18 ஆகிய அஸ்தமன, வக்கிர காலங்களில் அவற்றில் இருந்து மாறுதல் ஏற்படும். சங்கடங்களில் இருந்து விடுதலை கிடைக்கும். நெருக்கடி நீங்கும்.
ராகு, கேது சஞ்சாரம்: மே 25 வரை, ராகு 2 ம் இடத்திலும், கேது 8 ம் இடத்திலும் சஞ்சரித்து, குடும்பத்தில் நெருக்கடி, வரவில் தடை, வீண் பிரச்னைகள், வம்பு வழக்கு, மறைமுக எதிரி தொல்லைகள், உடல்பாதிப்பு என்ற நிலையை உருவாக்குவர். மே 26 முதல் ராகு ராசிக்குள்ளும், கேது 7 ம் இடத்திலும் சஞ்சரிப்பதால், அனைத்திலும் ஆசை அதிகரிக்கும். தவறான நபர்களின் வழிகாட்டுதலை ஏற்று சங்கடத்திற்கு ஆளாவதுடன், குடும்பத்திலும் நிம்மதியற்ற நிலைமை உருவாகலாம். நண்பர்களால் சில படிப்பினை கிடைக்கும்.
குரு சஞ்சாரம்: பிப். 10 வரை 4 ல் வக்ரமாக உள்ள குரு, பிப். 11 முதல் வக்ர நிவர்த்தியாகி 4 ம் இடத்திலேயே சஞ்சரிக்கிறார். தொடர்ந்து மே 11 முதல் 5 ம் இடமான மிதுனத்தில் பிரவேசிப்பவர், அக். 8 முதல் 6 ம் இடமான கடகத்தில் சஞ்சரிப்பார். இதனால், வருடத்தின் முற்பகுதியில் பார்வைகளாலும், பிற்பகுதியில் 5 ம் இட சஞ்சாரத்தினாலும் வேலை வாய்ப்பு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம், சொந்த வீடு, வாகனம் என்ற தேவைகள் பூர்த்தியாகும். அந்தஸ்து உயரும். வியாபாரம், தொழில், உத்தியோகம் முன்னேற்றமடையும். ராசிக்குள் சஞ்சரிக்கும் சனி, ராகுவின் மீது தன் பார்வையை செலுத்தி அவர்களால் ஏற்படும் பாதகப் பலன்களில் இருந்து உங்களைப் பாதுகாப்பார்.
சூரிய சஞ்சாரம்: ஜன. 1 - 13, ஏப். 14 - மே 14, ஜூலை 17 - ஆக. 16, நவ. 17 - டிச. 31 காலங்களிலும், தன் சஞ்சார நிலைகளால் உங்கள் நிலையை உயர்த்துவார். நீங்கள் எடுக்கும் வேலைகளை வெற்றியாக்குவார். எல்லாவித நெருக்கடிகளில் இருந்தும் பாதுகாப்பார். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் லாபத்தை அதிகரிப்பார். உடல் பாதிப்பு, வியாபாரத்தில் போட்டி, எதிர்ப்பு, பகை என்றிருந்த நிலைகளை மாற்றுவார். செல்வாக்கை அதிகரிப்பார். தொழில் தொடங்க எதிர்பார்த்த அனுமதி கிடைக்க வைப்பார். வழக்கில் வெற்றிக்கு வழிவகுப்பார்.
பொதுப்பலன்: கடந்த வருடத்தின் நெருக்கடிகள் இப்போது குறைய ஆரம்பிக்கும். வருடத்தின் முற்பகுதியில் 8,10,12 ம் இடங்களுக்கு குருப்பார்வை கிடைப்பதால் வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். செல்வாக்கு வெளிப்படும். 8 ம் இட கேதுவிற்கும் குருப்பார்வை உண்டாவதால் எந்தவிதமான சங்கடங்களும் நெருங்காது. வருடத்தின் பிற்பகுதியில் 5 ம் இட குரு ராசியையும் அங்குள்ள சனி, ராகுவையும் சுபப் பார்வையால் பார்ப்பதால் சங்கடம் விலகும். உங்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். சுப காரியங்கள் நடந்தேறும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்.
தொழில்: தொழில் ஸ்தானத்திற்கு வருடத்தின் முற்பகுதியில் குருப்பார்வை உண்டாவதும், பிற்பகுதியில் ராசிக்கும் அங்கு சஞ்சரிக்கும் சனிக்கும் குருப்பார்வை உண்டாவதாலும் நெருக்கடி விலகும். தொழில் முன்னேற்றமடையும். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். பில்டர்ஸ், ரசாயனம், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், பேக்டரி, டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம் லாபமடையும்.
பணியாளர்கள்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உங்கள் திறமைக்கு மதிப்பு அதிகரிக்கும். புதிய பொறுப்பு கிடைக்கும். ஊதியம் உயரும். அரசு ஊழியர்களுக்கு அதிர்ஷ்டமான வருடமாக இருக்கும்.
பெண்கள்: குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்று செயல்படுவது நல்லது. உங்கள் வேலைகள் எளிதாக நடந்தேறும். கணவரின் அன்பு கூடும். படிப்பு, வேலை வாய்ப்பு, திருமணம். குழந்தை என யோகம் உண்டாகும். சிலருக்கு வயிறு, கர்ப்பப்பை போன்றவற்றில் சங்கடம் ஏற்படும். பிரசவ காலத்தில் எச்சரிக்கை அவசியம்.
கல்வி: ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது மிக அவசியம். தேர்வு வரை உங்கள் முழு கவனமும் படிப்பில் இருப்பது நன்மையாகும்.
உடல்நிலை: சனி, ராகு, கேது சஞ்சார நிலைகளால் உடல்நிலையில் எதிர்பாராத பாதிப்பு ஏற்படும். வயிறு, இருதயம், மூட்டுவலி, செரிமானக் கோளாறு, தொற்று நோய், விபத்து என ஏதேனும் ஒரு பாதிப்பால் மருத்துவச் செலவு கூடும்.
குடும்பம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். எந்தவிதமான நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கும் சக்தி உண்டாகும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். சுப காரியங்கள் நடந்தேறும்.
பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட நன்மை பன்மடங்கு கூடும்.
பூரட்டாதி: வெற்றி மீது வெற்றி
தன, புத்திரக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் 1,2,3 ம் பாதங்களான கும்பத்தில் பிறந்தவர்களுக்கு சனி ராசிநாதனாகவும், 4 ம் பாதமான மீனத்தில் பிறந்தவர்களுக்கு குரு ராசிநாதனாகவும் உள்ளனர்.
2025 ம் வருடத்தில் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு, முன்னேற்றம் உண்டாகும். ஜென்ம சனியால் உண்டாகும் நெருக்கடி குருவின் சஞ்சாரத்தினாலும் பார்வைகளாலும் விலகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஆண்டு முழுவதும் குருவின் பார்வைகளால் நினைத்த வேலைகள் நடந்தேறும். வருடத்தின் பிற்பகுதியில் 6ம் இட ராகுவால் ஆற்றல் அதிகரிக்கும். அதிசயக்கத் தக்க மாற்றம் நடந்தேறும். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து, புகழ், சொத்து, சுகம் என முன்னேற்றம் ஏற்படும்.
சனி சஞ்சாரம்: பூரட்டாதி 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம சனியாக, குடும்பத்தில் குழப்பத்தையும், நட்புகளிடம் பகையையும், வீண் பிரச்னைகளையும், வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் பாதிப்பையும் ஏற்படுத்துவார். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு விரயச் சனியாக செலவுகளை அதிகரிப்பார். வரவில் தடைகளை உண்டாக்குவார். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலையை ஏற்படுத்துவார் என்றாலும் பிப். 13 - மார்ச். 29, ஜூலை 23 - நவ. 18 ஆகிய அஸ்தமன, வக்கிர காலங்களில் வருமானம் உயரும், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வரவு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும்.
ராகு, கேது சஞ்சாரம்: மே 25 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரித்து, மே 26 முதல் ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரிப்பதால் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் முற்பகுதியில் குடும்பத்தில் பிரச்னைகள், பண வரவில் தடை, பணியிடத்தில் சோதனைகள், வம்பு வழக்குகள், எதிரி தொல்லை, உடல் பாதிப்பு, பிற்பகுதியில் நட்பால் சங்கடம், குடும்பத்தில் நெருக்கடி, மனதில் வீண் ஆசைகள், சட்ட சிக்கல்கள் என சிரம பலன்கள் உண்டாகும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வருட முற்பகுதியில் எதிர்மறை பலன் ஏற்பட்டாலும், பிற்பகுதியில் அனைத்திலும் வெற்றி உண்டாகும், எதிர்ப்பு, போட்டி யாவும் விலகும். உடல்நிலை சீராகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். செல்வாக்கு உயரும்.
குரு சஞ்சாரம்: பிப். 10 வரை ரிஷபத்தில் வக்ரமாக உள்ள குரு, பிப். 11 முதல் வக்ர நிவர்த்தியாகி ரிஷபத்திலேயே சஞ்சரிக்கிறார். தொடர்ந்து மே 11 முதல் மிதுன ராசிக்குள் பிரவேசிப்பவர் அக். 8 முதல் கடகத்தில் சஞ்சரிப்பார். இதனால், 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் முற்பகுதியில் தன் பார்வைகளாலும், பிற்பகுதியில் 5 ம் இட சஞ்சாரம், பார்வைகளாலும் முன்னேற்றத்தை உண்டாக்குவார். வேலை வாய்ப்பு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம், சொந்த வீடு, வாகனம் என தேவைகளைப் பூர்த்தியாக்குவார். வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் லாபத்தை அதிகரிப்பார். ராசிக்குள் சஞ்சரிக்கும் சனி, ராகுவின் மீது தன் பார்வையை செலுத்தி அவர்களால் ஏற்படும் பாதகப் பலன்களில் இருந்து விடுவிப்பார். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஆண்டு முழுவதும் தன் பார்வைகளால் லாபத்தை அதிகரிப்பார். விரயச் செலவுகளை கட்டுப்படுத்துவார். செல்வாக்கை உயர்த்துவார். உடல்நிலையை முன்னேற்றுவார். பயத்தைப் போக்குவார்.
சூரிய சஞ்சாரம்: பூரட்டாதி 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜன.1 - 13, ஏப். 14 - மே 14, ஜூலை 17 - ஆக. 16, நவ. 17 - டிச. 31 காலங்களிலும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, ஜன. 1 - பிப். 12, மே 15 - ஜூன். 14, ஆக. 17 - செப். 16 காலங்களிலும், டிச. 16 - 31 காலத்திலும்
தன் சஞ்சார நிலைகளால் உங்கள் நிலையை உயர்த்துவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். முன்னேற்றத்தை உண்டாக்குவார். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கை அதிகரிப்பார். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் ஆதாயத்தை ஏற்படுத்துவார். வியாபாரத்தில், போட்டி, எதிர்ப்பு, பகை என்ற நிலையை மாற்றுவார். நினைத்த காரியத்தை தடையின்றி நடத்தி வைப்பார்.
பொதுப்பலன்: 2025 யோகமான ஆண்டாக இருக்கும். இதுவரை இருந்த நெருக்கடிகள் இல்லாமல் போகும். குருப்பெயர்ச்சி, ராகு, கேது பெயர்ச்சிகளால் கடந்த ஆண்டில் இருந்த போராட்ட நிலை விலகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். செல்வாக்கு வெளிப்படும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் மறையும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். செல்வாக்கு உயரும். சுபகாரியங்கள் நடந்தேறும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். பட்டம், பதவி, அந்தஸ்து என உங்கள் கனவு நனவாகும்.
தொழில்: முதலீட்டிற்கு ஏற்ற லாபமில்லை, முயற்சி செய்தும் முன்னேற்றமில்லை என்றிருந்த நிலை மாறும். இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். தொழில் முன்னேற்றமடையும். இயந்திரத்தொழில், வாகன உற்பத்தி, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், பேக்டரி, டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், எக்ஸ்போர்ட், ஜூவல்லரி, பைனான்ஸ், ஆன்லைன் வர்த்தகம் லாபமடையும்.
பணியாளர்கள்: கடந்தகால நெருக்கடி விலகும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். உங்கள் திறமைக்குரிய மதிப்பும், புதிய பொறுப்பும் கிடைக்கும். ஊதியம் உயரும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.
பெண்கள்: தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடந்த ஆண்டில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். சுய தொழில் முன்னேற்றமடையும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். கணவரின் அன்பு அதிகரிக்கும். திருமணத்தில் முறிவு ஏற்பட்டவர்களுக்கும், கணவனை இழந்தவர்களுக்கும் மறுமணம் நடந்தேறும். படிப்பு, வேலை வாய்ப்பு, திருமண யோகம் உண்டாகும்.
கல்வி: படிப்பில் இருந்த தடை விலகும். பொதுத் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மேற்படிப்பு முயற்சி வெற்றியாகும். ஆசிரியர்கள் ஆலோசனை இக்காலத்தில் பயன் தரும்.
உடல்நிலை: உடல்நிலையில் எதிர்பாராத பாதிப்பு ஏற்படும். இருதயக் கோளாறு, மூட்டுவலி, தொற்றுநோய், விபத்து என ஏதேனும் ஒரு பாதிப்பு ஏற்படும் என்றாலும் மருத்துவத்தால் குணமடைவீர்கள்.
குடும்பம்: குடும்பத்தில் இருந்த போராட்ட நிலை முடிவிற்கு வரும். நீண்டநாள் கனவுகள் நனவாகும். தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும். சுப காரியங்கள் நடந்தேறும். புதிய சொத்து, பொன் பொருள் சேரும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர்.
பரிகாரம்: பத்ரகாளியை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். நினைப்பது நிறைவேறும்.