பதிவு செய்த நாள்
29
டிச
2022
05:12
அசுவினி: தன்னலம் பாராமல் பிறருக்கு உதவும் அசுவினி நட்சத்திர அன்பர்களே இந்த ஆண்டு நீங்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சி உண்டாகக் காண்பீர்கள். தெய்வ வழிபாட்டில் நாட்டம் அதிகரிக்கும். தள்ளி வைத்திருந்த காரியங்களைச் செய்யத் தொடங்குவீர்கள். பெற்றோருடன் இணக்கமான உறவு உண்டாகத் தொடங்கும். உங்களுடைய தெளிவான எண்ணங்களால் குடும்பத்தில் உங்களின் மதிப்பு மரியாதை உயரும். பெரியோர்களின் தொடர்பு உண்டாகி உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். நெடுநாளாக உங்களை வாட்டி வதைத்த உடல் உபாதைகளில் இருந்து விடுபடுவீர்கள். வெளியூர், வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் உங்களை வந்தடையும். லாபகரமான முதலீடுகளைச் செய்து உபரி வருமானம் நிரந்தரமாக வர வழி வகுத்துக் கொள்வீர்கள். மறைமுகக் கலைகளான ஆழ்மனத் தியானம் போன்றவற்றைச் சுயமாகக் கற்றுக் தேர்ந்து அடுத்தவர்களுக்கும் கற்றுத் தருவீர்கள். சகோதர சகோதரிகளின் குறைகளைப் பெரிதுபடுத்த மாட்டீர்கள், மேலும் முன்பு உங்களை ஏமாற்றியவர்களையும் இந்த காலகட்டத்தில் மன்னித்து விடுவீர்கள்.
பணியாளர்கள் உயரதிகாரிகளின் ஆதரவை உறுதுணையாகக் கொண்டு உங்கள் பெரும்பாலான விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சக பணியாளர்களின் பொறாமைப் பார்வை உங்களைத் துரத்திக் கொண்டே இருக்கும். உங்கள் அன்றாடப் பணிகளில் சிறு குறையும் நேராமல் மிகுந்த அக்கறை செலுத்தி வருவது மிக அவசியம். எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, இடமாற்றம் போன்றவை கிடைக்கும். பொருளாதார நிலையில் பற்றாக்குறை நேர இடமில்லை. சிக்கன நடவடிக்கைகளின் மூலம் ஓரளவு சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.
வியாபாரிகள் கடன் விஷயத்தில் கவனமாக இருந்தால் மனநிறைவிற்கு குறைவிருக்காது. வியாபாரம் லாபகரமாகவே நடைபெற்று வரும். நாளுக்கு நாள் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்று வியாபாரத்திலும் வளர்ச்சியைக் காண்பது அவசியமாகும். அதே நேரத்தில் அவர்களைத் திருப்தியடையச் செய்யும் வகையில் தரமான பொருள்களைக் கொள்முதல் செய்து வைப்பது வியாபாரத்தை பெருக்க உதவும். தொழில் வளர்ச்சியும் வருமானமும் சீராக இருந்து வரும் என்றாலும் செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் கடன் வாங்கும் அவசியம் ஏற்படாமல் தவிர்க்கலாம். ஒழுங்காகத் திட்டமிட்டு முறைப்படி செயல்படுவதன் மூலம் தொழிலில் படிப்படியாக முன்னேற்றப் போக்கைக் காணலாம்.
கலைத்துறையினருக்கு இடைத்தரகர்கள் போன்றவர்களின் ஒத்துழைப்பை எதிர்பாராமல் நீங்கள் நேரடியாகவே முயற்சி செய்து வருவதன் மூலம் புதிய வாய்ப்புகள் சிலவற்றைப் பெற்று மகிழ இடமுண்டு. பின்னணி இசைக் கலைஞர்கள், பாடலாசிரியர்கள், நடனக் கலைஞர்கள் போன்றோர் கூடுதலான வாய்ப்புகளைப் பெற முடியும். வெளியூர்ப் பயணங்களை அடிக்கடி மேற்கொள்ள நேரும். சக கலைஞர்களிடம் சுமுகமாக நடந்து கொள்வதன் மூலம் உங்கள் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். வண்டி, வாகனவசதிகள் சிலருக்கு அமையக் கூடிய நிலை உண்டு. பயிற்சி பெற்று வரும் கலைஞர்கள் அரங்கேற்றத்தை நடத்தி மகிழ சில மாதங்கள் பொறுத்து இருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு நீங்கள் முயற்சித்தால் கல்வியில் நாளுக்கு நாள் முன்னேற்றம் காண முடியும். தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று உயர்வகுப்புகளுக்குச் செல்லக் கூடும். இடையில் நிறுத்தி வைத்திருந்த சில பகுதிகளுக்கான தேர்வுகளையும் இப்போது எழுதி நிறைவு செய்வீர்கள். சிலர் உயர்கல்வி கற்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்லவும் முயன்று வெற்றி பெறுவீர்கள். ஞாபக மறதி, உடல்சோர்வு சில நேரங்களில் ஏற்படக் கூடுமாயினும், அதற்கு இடங்கொடுக்காமல் இருப்பது நல்லது. சுற்றுலாப் பயணங்கள் என எங்காவது செல்ல நேரும்போது குளங்களில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது.
அரசியல்வாதிகளுக்கு சில சோதனைகள் நேர இடமுண்டு என்றாலும் நீங்கள் உறுதியான மனத்துடன் இருந்து பொறுமை காத்து வருவதன் மூலம் தலைமையின் பேரன்பையும், நன்மதிப்பையும் பெறுவீர்கள். மனதை அலைபாயவிட்டு மற்றவர்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி நிலை தடுமாறுவது எதிர்காலத்தில் துன்பம் தரும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டு நடப்பது அவசியம். உங்களுக்குத் தரப்பட்டுள்ள பணிகளைத் திறமையாக நிறைவேற்றுவதிலேயே உங்கள் நோக்கமெல்லாம் இருந்து வருவது அவசியம்.
பெண்களைப் பொறுத்தவரை வேலைக்குச் செல்பவர்களுக்கு எதிபாராத நன்மைகளைப் பெறக் கூடும். தள்ளிப்போய் வந்த திருமணம் திடீரென்று முடிவாகி திருமண வாய்ப்பைச் சிலர் பெறக்கூடும். உடல்நலத்தில் சிறுசிறு உபாதைகள் அடிக்கடி ஏற்படக்கூடிய நிலை உள்ளதால் கவனமாக இருந்து வருவது நல்லது. கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வதன் மூலம் குடும்பத்தில் சில சங்கடங்களைத் தவிர்க்கலாம். வேலை நிமித்தம் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த தம்பதி இப்போது சேர்ந்து வாழச் சந்தர்ப்பம் உருவாகும்.
பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் முருகனை வணங்க துன்பம் த துன்பங்களும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
அதிர்ஷ்ட எண்: 1, 3, 9
நிறம்: சிவப்பு, மஞ்சள்
சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரத்தை தினமும் 6 முறை சொல்லவும்.
பரணி: எதிலும் ஆழ்ந்த அறிவு கொண்ட பரணி நட்சத்திர அன்பர்களே இந்த ஆண்டு சிலருக்கு புதிய வீடுகளுக்கு மாறும் சூழ்நிலை உண்டாகும். பணவரவும் திருப்திகரமான நிலையிலேயே இருக்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் ஆழ்ந்த நுண்ணறிவை அனைவரும் பாராட்டுவார்கள். உங்கள் அதிகாரமும், பதவியும் உங்களைப் பலப்படுத்தும். உங்கள் மதிப்பு மரியாதையும் உயரும். தொழிலில் புதிய மாற்றங்களைப் புகுத்துவீர்கள். புதிய கடன்களும் கிடைக்கும். சிந்தனையில் தெளிவும் செயலில் வீரியமும் பெற்று உங்களது செயல்களை நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்யமும் சிறப்பாகவே தொடரும். வழக்கு விவகாரங்களில் சாதகமான திருப்பம் உண்டாகும். மனதில் காரணமில்லாமல் குடிகொண்டிருந்த குழப்பங்களும் மறையும். உற்றார், உறவினர்கள், நண்பர்கள் உங்களை அனுசரித்து நடந்து கொள்வார்கள். இரண்டுபட்டிருந்த குடும்பம் ஒன்று சேரும். குடும்பச் சூழலில் இன்பகரமான மாற்றங்களைக் காண்பீர்கள். குழந்தை இல்லாமல் தவித்தவர்களுக்கு மழலை பாக்கியமும் கிடைக்கும்.
பணியாளர்கள் உங்கள் அலுவலகம் தொடர்பான விஷயங்களில் முழுமையான திருப்தியைக் காண்பீர்கள். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வுகள் போன்றவற்றை எளிதாகப் பெற்று மகிழ்வீர்கள். சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் உயரதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கப்பெற்று மிகுந்த உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். மறைமுக வருமானங்களின் காரணமாக உங்கள் வங்கிக் கணக்கில் சேமிப்பு பெருகும் என்பதுடன் அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கும் நாளும் உயர்ந்து வரும். சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நீண்டகாலம் திட்டமிட்டு வந்தவர்களின் திட்டம் செயல்வடிவம் பெறும். இதுவரை வேலை தேடி அலைந்தவர்கள் இப்போது ஒரு நல்ல வேலை கிடைக்கப் பெறுவீர்கள். கவுரவப் பதவிகளைப் பெறக்கூடிய நிலை சிலருக்கு உண்டு.
வியாபாரிகளுக்கு மனநிறைவைப் பெறக்கூடிய வகையில் லாபம் கணிசமான அளவுக்கு உயரும். இருப்பினும் வியாபாரத்தில் உங்கள் நேரடிப் பார்வை இருப்பது அவசியம். கூடிமானவரை வாடிக்கையாளர்களைத் திருப்தி செய்வதில் உங்கள் கவனம் இருக்க வேண்டும். இல்லையெனில் போட்டியாளர்களின் பக்கம் உங்கள் வாடிக்கையாளர்களின் பார்வை திரும்பிவிட இடமுண்டு. எனவே தரமான பொருள்களைக் கொள்முதல் செய்வதில் நீங்கள் முழுக் கவனத்தையும் செலுத்துவது அவசியம். வாடிக்கையாளர்களிடம் கடன் பாக்கிகள் அதிகமாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. இல்லையெனில் வசூல் செய்வது கடினம். சிலர் வணிக சங்கங்களில் பொறுப்பான பதவியை ஏற்க நேரும்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் எளிதில் கிடைக்கக் கூடிய காலகட்டம் என்பதால் நீங்கள் பெரும் முயற்சி செய்யாமலேயே வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் சக கலைஞர்களின் போட்டியும் கடுமையாகவே இருக்கக் கூடும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போதும் எச்சரிக்கையுடன் முழுமையாகப் படித்துப் பார்த்து கையெழுத்திடுவது நல்லது. உங்கள் புகழும் பொருளாதார அந்தஸ்தும் உயரக்கூடிய வாய்ப்புண்டு. எல்லோரிடமும் அனுசரணையாகவும் சுமூகமாகவும் நடந்து கொள்வதன் மூலம் உங்களுக்குரிய வாய்ப்புகள், பிற கலைஞர்களுக்குக் கை நழுவிப் போகாமல் காத்துகொள்ள முடியும் என்பது கவனத்தில் கொள்வது அவசியம்.
மாணவர்களுக்கு படிப்பில் மட்டுமில்லாமல் விளையாட்டுப் போட்டிகள் போன்ற துறைகளிலும் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டு பெறுவீர்கள். சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயிலும் வாய்ப்பைப் பெறுவர். அரசு வழங்கும் கல்விச் சலுகைகளை பெற்று மகிழ்வீர்கள். நீங்கள் பிற துறைகளில் ஈடுபாடு கொண்டவர்கள் என்றாலும் இப்போதைக்கு படிப்புக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்தாக வேண்டும்.
அரசியல்வாதிகளுக்கு தன்னலமற்ற தொண்டின் காரணமாக தலைமையின் பாராட்டை பெறுவீர்கள். உங்கள் மனஉறுதியும், விசுவாசமும் உங்களுக்குப் பொறுப்பான பதவிகளையும் பெற்றுத் தரும். இதன் காரணமாக உங்கள் பொருளாதார அந்தஸ்தையும் உயர்த்திக் கொள்வது சாத்தியமாகும். தலைமை மட்டுமல்லாமல் தொண்டர்களும் உங்களை மிகவும் மதிப்பார்கள் என்பதால் நாளுக்கு நாள் செல்வாக்கு உயரக் காண்பீர்கள். உங்கள் மனஉறுதியைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்பதையும் நீங்கள் மறந்துவிடக் கூடாது.
பெண்கள் வேலையின் காரணமாக வெவ்வேறு ஊர்களில் இருந்தவர்கள் இப்போது சேர்ந்து வாழும் நிலைமை உருவாகும். திருமணம் தள்ளிப்போய் வந்த சிலருக்கு இப்போது திருமண யோகம் கிட்டும். சிலருக்கு மனம் விரும்பியவரையே மாலையிட்டு மணம் முடிக்கும் வாய்ப்பு அமையும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். திருமணம் போன்ற உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்து மகிழும் வாய்ப்புண்டு. குடும்ப விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி சிறு சச்சரவுகளைச் சமாளித்து அனைவரின் நன்மதிப்பையும் அன்பையும் பெறுவீர்கள். புத்திர வழியில் மகிழ்ச்சியடையும் வகையில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். மறைமுகச் சேமிப்புகள் மனநிறைவு தரும்.
பரிகாரம்: பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும். பணப் பிரச்னை நீங்கும்.
அதிர்ஷ்ட எண்: 2, 6, 9
நிறம்: வெள்ளை
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஸ்ரீமஹாலக்ஷ்ம்யை நமஹ என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.
கார்த்திகை 1ம் பாதம்: வேகத்துடன் விவேகமும் பெற்ற உங்களுக்கு இந்த ஆண்டு உழைப்பு கூடினாலும் அவற்றுக்கு இரட்டிப்பான வருமானம் கிடைக்கும். புதிய வண்டி, வாகனம் வாங்குவீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். உடல்நிலை சிறப்பாக இருக்கும். கூட்டாளிகளும் நண்பர்களும் உங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள். உங்களைச் சார்ந்திருப்பவர்களையும் உயர்த்தி விடுவீர்கள். அதேநேரம் எவருக்கும் அவர்கள் கேட்காமல் அறிவுரை கூற வேண்டாம். வாழ்க்கை சலிப்பு தட்டிவிட்டது என்றிருந்தவர்களுக்கு அது மாறி நம்பிக்கை துளிர்விடும். வெளிநாடுகளுக்கு வேலை, கல்வி ஆகியவற்றிற்காகப் பயணம் செய்ய நேரிடும். அதோடு சமூகத்தின் மேல்தட்டு மக்களின் நட்பு கிடைக்கும். கடின வேலைகளையும் சரியாக முடித்து திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் உதவிகளும் கிடைக்கும் காலகட்டமாக அமையும்.
பணியாளர்களுக்கு பணிகளில் கவனக் குறைவு கூடாது. சகபணியாளர்கள் உங்கள் மீது புகார் எழுப்பத் தயாராயிருப்பார்கள். மறைமுக வருமானங்களில் அதிக எச்சரிக்கை தேவை. நீங்கள் எதிர்பார்த்த்படி சிலருக்கு இடமாற்றம் கிடைத்தாலும் அங்கு பணிச்சுமைக்கு ஆளாவீர்கள். உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறக்கூடிய வகையிலும், புகார் எழ வாய்ப்பில்லாத நிலையிலும் உங்கள் பணிகளில் மிகுந்த அக்கறையுடன் இருந்து வருவது அவசியம். சக பணியாளர்களிடம் பணிவாகவும் சுமூகமாகவும் பழகி வருவதன் மூலம் பெரும்பாலான சங்கடங்களைத் தவிர்க்கலாம். உடல் நலத்திலும் கவனம் செலுத்துவது அவசியம்.
வியாபாரிகளுக்கு எதிரிகள் உங்களுக்குப் போட்டியாகக் கடுமையாக இயங்கக் கூடும் என்பதால் உங்கள் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் நீங்கள் புதுமையாக ஏதேனும் சலுகைகளை அறிவித்து அவர்களை உங்கள் பக்கமே தக்க வைத்துக் கொள்வதன் மூலம் வியாபாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படாமல் குறைந்தபட்ச லாபத்துடன் நடைபெற்று வர வழிவகுக்கலாம். வேலையாள்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வருவதன் மூலம் விரையங்களைத் தவிர்க்கலாம். வாடிக்கையாளர்களிடம் அதிக அளவில் கடன் நிலுவை இல்லாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் அமைவதற்குரிய நிலை சாதகமாக இல்லை என்றாலும் கடுமையாக உங்கள் முயற்சிகளைத் தொடர்வது அவசியம். உங்கள் வசதிகளில் பெரும்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும் அளவில் சில வாய்ப்புகளை பெறக்கூடும். எல்லாரிடமும் இனிமையாகப் பேசி பழகுங்கள். இசை, நடனக் கலைஞர்கள், பாடலாசிரியர்கள் போன்ற பிரிவினர் கூடுதல் வாய்ப்புகளைப் பெறக்கூடும். வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளும் போது மிகுந்த நிதானமாகவும், சிக்கனமாகவும் நடந்து கொள்வது அவசியம். புதிய வாய்ப்புகள் கிட்டும். அதன் மூலம் நற்பெயர் கிட்டும்.
மாணவர்கள் விளையாட்டை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. சிலர் படிப்பை நிறுத்தி விட்டு உத்தியோக வாய்ப்புகளைப் பெறவும் முயலக் கூடும். விளையாடும் போதும், வாகனங்களிலும் கவனம் தேவை. முயற்சிக்கேற்றவாறு மதிப்பெண்களைப் பெறுவர். பெற்றோர்களின் ஆதரவும் நண்பர்களின் உதவியும் கிடைக்கும். ஆன்மிகத்திலும் விளையாட்டிலும் நேர்த்தியாக ஈடுபடுவீர்கள். படிப்பிற்காக போதிய பயிற்சிகளைத் தவறாமல் செய்வீர்கள்.
அரசியல்வாதிகள் எதிலும் எப்போதும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய ஆண்டாக அமைகிறது. சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைத்தாலும் எதிரிகளின் கை ஓங்கியே காணப்படும். கட்சியில் உங்கள் மீது கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்படலாம். வாயைக் கொடுத்து விவகாரத்தில் மாட்டிக்கொள்ள வேண்டாம். அதே நேரம் பயணங்களில் வெற்றியடைவீர்கள்.
பெண்களுக்கு எதிலும் பொறுமையும், நிதானமும் தேவை. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். உடல் நலத்தில் அக்கறை தேவை. கருவுற்ற பெண்களுக்கு கவனம் தேவை. கோபத்தைக் குறைத்துக் கொள்வதும் நன்மைகளுக்கு வழிவகுக்கும். யாரிடமும் தேவையில்லாத பேச்சுகளை பேச வேண்டாம்.
பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய் தந்தையரின் உடல்நலம் சிறக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6
நிறங்கள்: வெள்ளை, பச்சை
சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் நமச்சிவாய” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.