பதிவு செய்த நாள்
31
டிச
2024
01:12
காரமடை; கொங்கு நாட்டில் சிறப்பு வாய்ந்த காரமடை அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி வைபவம் தொடக்கமாக பகல் பத்து உற்சவம் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் திருவாராதனம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 8:30 மணி அளவில் கால சந்தி பூஜை முடிந்து ஸ்ரீ ரங்கநாதர் வெள்ளி சிம்மாசனத்தில் வெண்பட்டு குடை சூழ திருக்கோவில் வலம் வந்து ரங்க மண்டபத்தை அடைந்தார். நம்மாழ்வார் திருமங்கை, ஆழ்வார், இராமானுஜர் ஆகியோர் பெருமாள் முன்பு எழுந்தருளி அவர்களுக்கு பரிவட்டம் மரியாதை சடாரி மரியாதை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஸ்தலத்தார்கள் வேதவியாச பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஆகியோர் பரிவட்ட மரியாதை பெற்று திருமொழி திருநாள் தொடக்கத்தில் தமிழ் வேதமாகிய திவ்ய பிரபந்த த்தில் குலசேகர பெருமாள் அருளிச்செய்த பெருமாள் திருமொழி, திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த திரு நெடுந்தாண்டகம், திரு குறுந்தாண்டகம் மற்றும் பெரிய திருமொழி பாசுரங்கள் சேவிக்க தொடங்கினர், உடன் அர்ச்சகர்கள் சுரேஷ் நாராயணன், திருவேங்கடம், சௌந்தரராஜன், ராஜா சீனிவாசன், வெங்கடேஷ் பிரசாத், ஹரி, உள்ளிட்டோர் சேவித்தனர். சேவா காலம் நிறைவு பெற்று வேத மந்திரம், மந்திர புஷ்பம், திருவாராதனம் மங்கள ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில் மிராசுதாரர்கள் முத்துசாமி, ஜெகநாதன், ஆனந்த், கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாட்டை அறங்காவலர் குழு தலைவர் தேவ ஆனந்த் அறங்காவலர்கள் ராமசாமி, கார்த்திகேயன், சுஜாதா ஜவகர், குணசேகரன் செயல் அலுவலர் சந்திரமதி ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.