மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மருதூர் லட்சுமி நாராயணபுரத்தில் 200 ஆண்டுகள் பழமையான ராம வரதாகினி மடம் உள்ளது. இங்குள்ள ராமர் சன்னதியில் ஆஞ்சநேய சுவாமி அருள் பாலிக்கிறார். இந்த திருமடத்தில் ஹனுமன் ஜெயந்தி விழா மார்கழி மாத மூல நட்சத்திரம் கூடிய அமாவாசை தினமான நேற்று தருமபுரம் ஆதீனம் கட்டளை ஸ்ரீமத் மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் கோலாகலமாக நடந்தது. இன்று ராம வரதாகினி மடத்தில் ஹனுமன் ஜெயந்தி உற்சவ பூர்த்தி விழா நடந்தது. இதனை முன்னிட்டு ஆஞ்சநேய சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு, வடை மாலை சாற்றி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆஞ்சநேய சுவாமிக்கு பஞ்சமுகார்சனை செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் ஆஞ்சநேய சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மருதூர் சாம்பசிவம் மற்றும் ராஜாபிள்ளை ஆகியோர் செய்திருந்தனர்.