பதிவு செய்த நாள்
01
ஜன
2025
10:01
கோவை; கோவையில், ஆங்கில புத்தாண்டு தினத்தை மக்கள், ஆட்டம், பாட்டத்துடன் கோலாகலமாக கொண்டாடி வரவேற்றனர்.
உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டை அனைத்து தரப்பு மக்களும் கோலாகலமாக கொண்டாடினர். கோவையில், நேற்று நள்ளிரவு, பல்வேறு பகுதிகளிலும், மக்கள், ஆங்கில புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி வரவேற்றனர். இருப்பினும், கடந்தாண்டு போல, கோவை மாநகராட்சி மற்றும் போலீசார் சார்பில், புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ஏதும் நடக்கவில்லை. இரவு, 11:00 மணிக்கு, விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில், மாநகரில் உள்ள அவிநாசி மேம்பாலம், காந்திபுரம், உக்கடம், வடகோவை மேம்பாலங்களை, போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடினர். மாநகரில் வழக்கமாக புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்கள் கூடியிருக்கும் இடங்களில், பல்வேறு இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. போலீசார், பல்வேறு இடங்களில், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இருப்பினும், நள்ளிரவு நெருங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பிலிருந்து, இளைஞர்கள் பட்டாளம், பைக்குகள் மற்றும் கார்களில் அதிவேகத்தில் சீறிப்பாய்ந்தனர். கோவை மாநகரில், ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். குடும்பத்துடனும், நண்பர்களுடன் ஏராளமானோர் கலந்து கொண்டதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரோஸ்கோர்ஸ் நடைபாதையில், பலூன்கள் மற்றும் வண்ண விளக்கு கிரீடங்கள் விற்பனை செய்யும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், வண்ண விளக்கு கிரீடங்கள் அணிந்தும், வண்ண வண்ண பலூன்களை ஏந்தியும் இருந்ததால், அப்பகுதி முழுவதும் வண்ணமயமாக இருந்தது. ஆங்கில புத்தாண்டு துவங்கியதும், அனைவரும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். அனைத்து சர்ச்களிலும் புத்தாண்டு தினத்தையொட்டி, சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. கோவையின் முக்கிய பகுதிகளில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வாகன சோதனையின்போது, மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டிவந்தவர்களை பிடித்து, போலீசார் அறிவுரை வழங்கினர். கடந்த காலங்களை ஒப்பிடும்போது, இந்தாண்டு, அமைதியாகவே புத்தாண்டு துவங்கியது.