12ம் நூற்றாண்டு நிசும்ப சூதனி சிற்பம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2025 10:01
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை அருகே எஸ்.நாகூரில் 12ம் நூற்றாண்டை சேர்ந்த நிசும்ப சூதனி சிற்பத்தை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
எஸ். நாகூரில் 12 ம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பம் இருப்பதாக பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி பேராசிரியர் தாமரை கண்ணன் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து அவர்கள் சென்று ஆய்வு செய்தபோது அந்த சிற்பம் பிற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்த நிசும்ப சூதனி சிற்பம் என கண்டறிந்தனர். சிற்பம் குறித்து அவர்கள் கூறியதாவது: பொதுவாக நிசும்பசூதனி வழிபாடு என்பது அம்மன் வழிபாடுகளில் ஒன்று. இதுசோழர்களின் குலதெய்வ வழிபாடு.
சோழர்களின் ஆட்சி பாண்டிய நாட்டில் பரவிய போது இந்த சிற்பம் எடுக்கும் மரபு பாண்டிய நாட்டிலும் வந்திருக்கலாம். புராணங்களின் அடிப்படையில் சும்பன், நிசும்பன் என்ற 2 அசுரர்களை வதம் செய்வதற்காக அன்னை பார்வதி தேவி எடுத்த அவதாரம் தான் காளி வடிவம். 2 அசுரர்களை அழித்ததால் இந்த அவதாரத்திற்கு பெயர் நிசும்பசூதனி அவதாரம் எனப்பெயர் பெற்றது. இந்தச் சிற்பம் அமர்ந்த நிலையில் 3 அடி முதல் 4 அடி உயரத்தில் உள்ளது. 8 கரங்களுடன் உள்ளது. வலது பக்கம் உள்ள கரங்களில் சூலாயுதம், வாள், உடுக்கை, அம்பு இடதுபுறம் உள்ள 4 கரங்களில் பாம்பு, கேடயம், சக்தி ஆயுதம், கபாலத்தோடும் உள்ளது. இடது காலை கீழே தொங்கவிட்டபடி வலது காலை குத்துக்காலிட்டு ராஜா லீலாஸனத்தில் அமர்ந்திருக்கிறார். காலடியில் அசுரர்களை போட்டு மிதித்தபடி உள்ளார். தலை மகுடம் தீச்சுடர் மகுடம் ஆக உள்ளது. இதற்கு சுடர்முடி மகுடம் என்று பெயர். நிசும்பசூதனி தான் என்றாலும், ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயரில் அம்மன் அழைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.