பதிவு செய்த நாள்
02
ஜன
2025
10:01
திருச்சி; ஸ்ரீரங்கம் பகல் பத்து உற்சவம் மூன்றாம் நாளில் நம்பெருமாள் அஜந்தா சவுரிக்கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
108 வைணவ தளங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றி வணங்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் மூன்றாம் திருநாள் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இன்று காலை மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் அஜந்தா சவுரிக்கொண்டை, கலிங்கத்துராய், மார்பில் பங்குனி உத்திர பதக்கம், வைர அபயஹஸ்தம், ரத்தினகிளி, பவளமாலை, முத்துச்சரம் பின்புறம் புஜகீர்த்தி, அண்டபேரண்ட பக்ஷி பதக்கம் மற்றும் ரத்தினதிருவடி அணிந்து பல்லக்கில் திருவீதி உலாவந்து பின்னர் அர்ச்சுன மண்டபத்தில், ஆழ்வார்கள் முன்னிலையில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இன்று மாலை வரை அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வரும் நம் பெருமாள் இரவு 9 மணிக்கு மீண்டும் மூலஸ்தானம் சென்று அடைகிறார். வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் வருகிற ஜனவரி 10ஆம் தேதி அதிகாலை திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.