பதிவு செய்த நாள்
02
ஜன
2025
10:01
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், சொர்க்கவாசல் திறப்பு நாளன்று, திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின், பகல் பத்து உற்சவம் நேற்று முன் தினம் துவங்கியது. முதல்நாள் காலை, மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின பாண்டியன் கொண்டை, வைர பதக்கம், வைர அபயஹஸ்தம், அடுக்கு பதக்கம், முத்து மாலை, பவள மாலை, காசு மாலை, வைர ஒட்டியாணம், வைர நெற்றிப்பதக்கம் போன்ற திருவாபரணங்கள் சூடிய நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, அர்ஜுன மண்டபம் சென்றடைந்தார். அங்கு எழுந்தருளிய நம்பெருமாள் மாலை வரை பக்தர்களுக்கு சேவை சாதித்தார். வரும் 10ம் தேதி அதிகாலை 5:15 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதையொட்டி, அன்றைய தினம் திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகள் மற்றும் தமிழக அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறையை கலெக்டர் பிரதீப்குமார் அறிவித்துள்ளார். அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஜன. 25ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.