பதிவு செய்த நாள்
02
ஜன
2025
01:01
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில், வரும் 4ம் தேதி, ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழியில் ஆருத்ரா, ஆனியில் ஆனி திருமஞ்சனம் என, ஆண்டுக்கு இரு முறை தரிசன விழா நடைபெறும். இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா, வரும் 4ம் தேதி காலை 6:15 மணி முதல் 7:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 11ம் தேதி தங்க ரதத்தில் பிஷாடன மூர்த்தி வீதியுலா நடக்கிறது. 12ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்றைய தினம் காலை 5:00 மணிக்கு நடராஜர், அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் தனித்தனி தேரில் எழுந்தருளி வீதியுலா வருவர். 13ம் தேதி அதிகாலை 2:00 மணி முதல் 6:00 வரை, ஆயிரங்கால் மண்டப முகப்பில் சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து திருவாபரண அலங்காரம், பஞ்ச மூர்த்தி வீதி உலா காட்சியும், சித்சபையில் விஷேக ரகசிய பூஜையும் நடைபெறும். மாலை 3:00 மணிக்கு மேல், நடராஜரும், அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடனமாடியபடி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் தரிசன விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.