பதிவு செய்த நாள்
04
ஜன
2025
10:01
சென்னை; திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசிக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தபின், அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி:
வைகுண்ட ஏகாதசி வரும், 10, 11ம் தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலுக்கு, இரண்டு லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் வருவர். இந்த ஆண்டும் சிறப்பு தரிசன கட்டணம் ரத்து செய்யப்படுகிறது; அனைவருக்கும் பொது தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கர்ப்பிணியர், காலை 8:00 மணி முதல் 10:00 மணி; மதியம் 2:00 மணி முதல் 4:00 மணி வரை, கோவில் பின்கோபுர வாசல் வழியாக சென்று தரிசிக்கலாம். அவர்களுக்காக, எட்டு பேட்டரி வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்படும். பரமபதவாசல் காலை, 4:30 மணிக்கு திறக்கப்படும். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், 500 பேருக்கு, பரமபதவாசல் தரிசனம் செய்ய கட்டணமின்றி, அனுமதிக்கப்படுவர். 500 ரூபாய் தரிசன சீட்டு, 1,500 கட்டண சீட்டு, ‘ஆன்லைன்’ வாயிலாக, வரும், 6ம் தேதி பெற்று கொள்ளலாம். வாகனங்களை நிறுத்த, என்.கே.டி., பள்ளி, ராணி மேரி கல்லுாரிகளில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.