சபரிமலையில் வெடி வழிபாடு; நான்கு கவுன்டர்கள் அமைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2025 11:01
சபரிமலை; சபரிமலையில் பக்தர்கள் வெடி வழிபாடு நடத்த நான்கு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. சபரிமலை வரும் பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனாக வெடிவழிபாடு நடத்துகின்றனர். கடந்த காலங்களில் ஏற்பட்ட விபத்துகளாலும், வனத்துறையின் எதிர்ப்பாலும் அடிக்கடி இந்த வெடி வழிபாடு முடங்கியது. எனினும் இந்தாண்டு சீசனில் துவக்கம் முதலே வெடி வழிபாடு நடந்து வருகிறது. அதிகமான பக்தர்கள் இந்த வழிபாட்டை நடத்தி செல்கின்றனர். இதற்காக மாளிகைபுரம் கோயில் முன்புறத்திலும், சந்திராங்கதன் ரோட்டில் பெய்லி பாலம் துவங்கும் இடத்திலும், பெரிய நடைப்பந்தல் கீழ் பகுதியிலும், அதன் மேலே பிளை ஓவரிலும் இந்த கவுன்டர்கள் உள்ளன. ஒரு வெடி வழிபாடு நடத்த இருபது ரூபாய் கட்டணம். இந்த கட்டணத்தை கவுன்டரில் செலுத்தினால் அங்கு இருக்கும் ஊழியர் பக்தர் பெயரை ஒலிபெருக்கியில் அறிவித்ததும் 600 மீட்டர் தூரத்தில் வெடி கொளுத்தப்பட்டு வெடிக்கும். வெடி வெடிக்கப்படுகிறதா என்பதை பக்தர் அந்த கவுன்டரில் இருந்தே பார்க்கும் வகையில் பெரிய டிவி வைக்கப்பட்டுள்ளது. முன்காலத்தில் கரிமலை, சரங்குத்தி போன்ற இடங்களிலும் வெடி வழிபாடு நடந்தது. இது காட்டு விலங்குகளுக்கு பிரச்னை ஏற்படுத்தும் என்பதால் வனத்துறை தலையிட்டு இதை தடை செய்தது. 2023 ஜனவரி 2ம் தேதி மாளிகைபுறம் கோயில் சமீபம் உள்ள வெடிப்புரையில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் இறந்தனர். இதனால் கடுமையான பாதுகாப்பு விதிகள் விதிக்கப்பட்டு தற்போது வெடி வழிபாடுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த மண்டல மகர விளக்கு உற்ஸவ காலத்தில் 1500 கிலோ வெடி மருந்து பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.