பதிவு செய்த நாள்
06
ஜன
2025
02:01
சபரிமலை; சபரிமலையில் இந்தாண்டு மகர ஜோதியும் மகர சங்கரம பூஜையும் வரும் 14-ம் தேதி நடக்கிறது. சபரிமலையில் மகர விளக்கு சீசனின் முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம், இந்தாண்டு வரும் 14ம் தேதி நடக்கிறது. அன்று காலை 8:55 மணிக்கு மகர சங்கரம பூஜை நடக்கும் என தந்திரி கண்டரரு ராஜீவரரு கூறியுள்ளார்.
அபிஷேகம்; அந்நேரத்தில் திருவிதாங்கூர் அரண்மனையிலிருந்து கொடுத்து விடப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு நேரடியாக அய்யப்பன் விக்கிரகத்தில் அபிஷேகம் செய்யப்படும். மகரஜோதி மற்றும் மகர சங்கரம பூஜைக்கு முன்னோடியாக சுத்தி கிரியைகள் 12ம் தேதி துவங்குகிறது. அன்று மாலை தீபாராதனைக்கு பின் பிரசாத சுத்தி கிரியைகளும், 13ம் தேதி மதியம் உச்சபூஜைக்கு முன்னோடியாக பிம்பசுத்தி பூஜைகளும் நடத்தப்படுகின்றன. மேலும், 12ம் தேதி பந்தளத்தில் இருந்து புறப்படும் திருவாபரண பவனி 14ம் தேதி மாலை 5:30 மணிக்கு சரங்குத்தி வந்தடையும். அங்கு, தேவசம்போர்டு அதிகாரிகளின் வரவேற்புக்கு பின், சன்னிதானத்துக்கு கொண்டு வரப்படும் திருவாபரணங்களை வாங்கி தந்திரி மற்றும் மேல் சாந்திகள் அய்யப்பன் விக்ரகத்தில் அணிவித்து மாலை 6:30 மணிக்கு தீபாராதனை நடத்துவர். இது முடிந்த சில வினாடிகளில் பொன்னம்பலமேட்டில் மூன்று முறை ஜோதி தெரியும்.
பக்தர்கள் கூட்டம்; டிச., 30ல் துவங்கிய மகர விளக்கு சீசனில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 90,000 முதல் ஒரு லட்சம் பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதனால் பக்தர்களின் நீண்ட வரிசை மரக்கூட்டம் வரை நீண்டுள்ளது. மகரஜோதி நாளில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் அதற்கு முந்தைய நாட்களில் வரும் பக்தர்கள் சன்னிதானத்தில் தங்குவர் என்பதால், நெரிசலைத் தவிர்க்க அதிகாரிகள் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.