பதிவு செய்த நாள்
07
ஜன
2025
12:01
சபரிமலை; சபரிமலையில் மகரஜோதி நாளில் நெரிசலை தவிர்க்க ஸ்பாட் புக்கிங்கை முழுமையாக நிறுத்த ஆலோசனை நடக்கிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க 13 ஆயிரம் லட்சம் லிட்டரை சுத்திகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சபரிமலையில் ஜன., 14ல் மகரஜோதி தரிசனம் நடக்கிறது. பொன்னம்பலமேட்டில் தெரியும் மகரஜோதியை தரிசிக்க பக்தர்கள் அதிகளவில் கூடுவர். ஜன., 10 முதல் வரும் பக்தர்கள் ஜோதி தரிசனத்திற்காக சன்னிதானத்தில் தங்குவர். குடிநீர் தேவை அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு கூடுதல் குடிநீரை சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி பம்பை முதல் சன்னிதானம் வரை உள்ள பாதைகளில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு மையங்களில் 24 மணி நேரமும் குடிநீர் சுத்திகரிக்கப்படும். ஜன.,12 முதல் 14- வரை 13 ஆயிரம் லட்சம் லிட்டர் சுத்திகரித்து வழங்கப்படும் என கேரளா குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மகரஜோதி நாளில் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஜன.,12 முதல் 14 வரை ஸ்பாட் புக்கிங் நிறுத்தி வைக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்காக உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். ஜன., 10 முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் ஜோதி தரிசனத்திற்காக சன்னிதானம் மற்றும் சுற்றுப்புறங்களில் தங்கி விடுவர் என்பதால் நெரிசலை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மகர விளக்கு கால பூஜைகளுக்காக டிச., 30 -ல் நடை திறந்த நாள் முதல் தினமும் 22 ஆயிரம் முதல் 26 ஆயிரம் வரை பக்தர்கள் இந்த ஸ்பாட் புக்கிங் மூலம் பதிவு செய்து தரிசனத்துக்கு வருகின்றனர். ஸ்பாட் புக்கிங் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என்று போலீஸ் தரப்பிலிருந்து அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை ரூ.5000 முதல் ரூ.10 ஆயிரமாக குறைப்பதற்கு கேரள உயர்நீதிமன்றம் நியமித்துள்ள ஸ்பெஷல் கமிஷனருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர் இது தொடர்பாக கேரளா டி.ஜி.பி.,யுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுப்பார். ஸ்பாட் புக்கிங் முழுமையாக நிறுத்தப்படும்பட்சத்தில் நிலக்கல்லில் பக்தர்களிடம் ஆன்லைன் டிக்கெட் இருக்கிறதா என்பதை பரிசோதித்த பின்னரே பம்பை வர அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை ஜன.,12 -ல் 60 ஆயிரம், ஜன.,13-ல் 50 ஆயிரம், ஜன., 14-ல் 40 ஆயிரம் என குறைக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் தற்போது பகலில் கடுமையான வெப்பமும் இரவில் கடுமையான குளிரும் நிலவுகிறது.