பதிவு செய்த நாள்
08
ஜன
2025
11:01
திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில், வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, ஒரு லட்சத்து, 08 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி நேற்று பக்தி மணத்துடன் நடந்தது.
திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா, விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், சுவாமி தரிசனம் செய்துவிட்டு, பரமபத வாசல் வழியாக வரும் பக்தர்களுக்கு, ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில், லட்டு பிரசாதம் வழங்கும் சேவை நடந்து வருகிறது. கடந்த, 30ம் தேதி முதல், பகல் பத்து உற்சவத்துடன், வைகுண்ட ஏகாதசி விழா துவங்கியது; வரும், 10ம் தேதி பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. சிறப்பு அலங்காரத்துடன், கருட வாகனத்தில் எழுந்தருளும் நம்பெருமாள், பரமபத வாயில் வழியாக வந்து, நம்மாழ்வாருக்கும், பக்தர்களுக்கும் அருள்பாலிக்க இருக்கிறார். வைகுண்ட ஏகாதசி நாளில், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ஏதுவாக, ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில், ஒரு லட்சத்து, 08 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி நேற்று நடந்தது. ஸ்ரீவாரி டிரஸ்ட் நிர்வாகிகள் முன்னிலையில், காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் லட்டு தயாரிக்கும் பணி சிறப்பு வழிபாட்டுடன் துவங்கியது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 25க்கும் அதிகமான சமையல் கலைஞர்கள், கடலை மாவில் பூந்தி தயாரித்தனர்; சர்க்கரையில் இருந்து பாகு தயாரித்து, பூந்தி நனைக்கப்பட்டது. சுத்தமான பசும் நெய்யில் பொரித்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய், நெய் ஆகியவை கலந்து, லட்டு உருட்டும் பணி நடந்தது. இதுகுறித்து திருப்பூர் ஸ்ரீவாரி டிரஸ்ட் நிர்வாகிகள் கூறுகையில்,‘‘வைகுண்ட ஏகாதசி விழாவில், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ஏதுவாக, ஒரு லட்சத்து, 08 ஆயிரம் லட்டு தயாரிக்கப்பட்டது. அதற்காக, மூன்று டன் சர்க்கரை, இரண்டு டன் கடலை மாவு, தலா 16 கிலோ எடையுள்ள, 150 டின் ‘ரீபைண்ட்’ ஆயில் மற்றும் 25 ‘டின்’ நெய், அதிக அளவு முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் பயன்படுத்தப்பட்டது. லட்டு தயாரிக்கும் சேவை பணியில், 200க்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர். வைகுண்ட ஏகாதசி நாளில், சுவாமிக்கு படைக்கவும் தனியே லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது,’’ என்றனர்.