பதிவு செய்த நாள்
16
ஜன
2025
02:01
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில், அத்தி வரதர் சயன நிலையில் உள்ளார். பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதில், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வரும் பக்தர்கள், வரதராஜ பெருமாள் கோவில் சன்னிதி தெருவின் இருபுறங்களிலும், தங்களது வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக பார்க்கிங் செய்துவிட்டு செல்கின்றனர். இதனால், கோவிலுக்கு நடந்து செல்லும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, அப்பகுதியில் வசிப்போர் தங்களுடைய வீடுகளுக்கு இருசக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனால், சன்னிதி தெருவில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, வரதராஜ பெருமாள் சன்னிதி தெருவில், வாகனங்கள் நிறுத்துவதற்கு போலீசார் தடை விதிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.