பதிவு செய்த நாள்
18
ஜன
2025
11:01
திருச்சி; ஸ்ரீரங்கத்தில், தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள் வேடுபறி உற்சவம் நடந்தது.
திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி உற்சவம், கடந்த 30ம் தேதி, திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. ஜன. 9ம் தேதி பகல்பத்து உற்சவம் நிறைவு நாளன்று, நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் சேவை சாதித்தார். மறுநாள் (10ம் தேதி) அதிகாலை 5:15 மணிக்கு, சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் நடைபெற்றது. நேற்று முன்தினம், நம்பெருமாள் கைத்தல சேவையும், நேற்று, ஆயிரங்கால் மண்டபம் முன் அமைந்த மணல் வெளியில், திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம் நடைபெற்றது. அப்போது, தங்கக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி வையாளி கண்டருளினார். திருமாலுக்கு தொண்டுகள் செய்த திருமங்கை மன்னன், தன்னிடம் இருந்த பெரும் பொருள்களை செலவு செய்தார். தன்னிடம் பொருள் இல்லாமல் போனதால், கைங்கர்யத்தை தொடர்ந்து செய்வதற்காக, வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டார். அதனால், ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற நாமத்தை உபதேசித்து, நம்பெருமாள் அவரை ஆட்கொண்ட வைபம் தான் வேடுபறி உற்சவம். ராப்பத்து உற்சவத்தின் 10ம் நாளில், தீர்த்தவாரியும், அடுத்த நாள் நம்மாழ்வார் மோட்சம், இயற்பா சாற்றுமுறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.