பதிவு செய்த நாள்
18
ஜன
2025
05:01
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வேண்டியும், மலையின் புனிதத்தை காக்க வேண்டியும் திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று கோயில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கரத்திலுள்ள தங்கவேலுக்கு பாலாபிஷேகம், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன், அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ராமலிங்கம், அகில பாரத ஹிந்து மகா சபா சஞ்சீவிகுமார், ஹிந்து மகா சபா அமைப்பு செயலாளர் கார்த்திக், நிர்வாகிகள் வினோத்குமார், செல்வம் மற்றும் மலை பாதுகாப்பு இயக்கத்தினர் பங்கேற்றனர்.
சோலை கண்ணன் கூறியதாவது: புனிதமான திருப்பரங்குன்றம் மலையில் சில நாட்களாக சிக்கந்தர் தர்கா டிரஸ்டிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து, தமிழ் கடவுளான முருகப் பெருமானின் சைவ மலையான திருப்பரங்குன்றம் மலை மேல் ஆடு, கோழி அறுப்பதற்கு, தங்களின் உரிமைகளை பறிக்கின்றனர் என பொய்யான விஷம பிரசாரத்தை பரப்பி வருவதுடன் போராட்டங்களும் நடத்துகின்றனர். திருப்பரங்குன்றத்தில் பதற்றத்தையும், மத ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாகவும், மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்
திருப்பரங்குன்றத்தில் உள்ள ஸ்ரீ ஸ்கந்தர் மலையை சிக்கந்தர் மலை என மாற்ற முயற்சித்தும், மலையை ஆக்கிரமிப்பு செய்வதற்காகவும்
இன்று (நேற்று) மலை மேல் சமபந்தி விருந்து நடத்துவதாகவும் அதில் பிற மத சகோதரர்களும் கலந்து கொள்ள வேண்டும் என அறிவித்து, ஆடு, கோழி அறுத்து ரத்த பலி கொடுத்து சமபந்தி என்ற பெயரில் விருந்துக்கு ஏற்பாடு செய்தனர். அதற்கு நாங்கள் கண்டனம் தெரிவித்துள்ளோம், அரசாங்கத்திடமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். அதன் அடிப்படையில் சமபந்தி விருந்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் ஹிந்து விரோத அரசு நடக்கிறது. சிறுபான்மையினர் ஓட்டு வங்கி அரசியல் நடக்கிறது. இதனால் அரசு, இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக மலை மேல் ஆடு, கோழி வெட்டுவதற்கு இந்த அரசு ஆதரவு கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இதனால் நாங்கள் தமிழக அரசை நம்பாமல், அசுரர்களை சம்ஹாரம் செய்த திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வேலுக்கு பால் அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டு புனிதமான மலையை பாதுகாக்க வேண்டும் என முருகப்பெருமானிடம் வேண்டியுள்ளோம். இது சம்பந்தமாக கோயில் துணை கமிஷனர் இடமும் கோரிக்கை மனு அளித்துள்ளோம். விரைவில் நீதிமன்றம் சென்று இப் பிரச்னையை முறையிட உள்ளோம். திருப்பரங்குன்றத்தில் இவ்வளவு பெரிய பிரச்னை நடந்து கொண்டிருக்கும்போது இது குறித்து இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர தி.மு.க., எம்.எல்.ஏ., கடிதம் கொடுத்தார். ஆனால் திருப்பரங்குன்றம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா இப்பிரச்னை குறித்து வாய் திறக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது என்றார்.