பதிவு செய்த நாள்
20
ஜன
2025
11:01
திருநெல்வேலி; நெல்லை அருகே 823 ஆண்டுகளுக்கு முந்தைய நகரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நெல்லை சுத்தமல்லியை அடுத்த கொண்டாநகரம் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் கல்வெட்டுக்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நெல்லை வரலாற்று பண்பாட்டு கள ஆய்வு மைய இயக்குனர் மாரியப்பன் இசக்கி மற்றும் நிர்வாகிகள் கோயிலில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர். குலசேகரமுடையார் கோயிலில் நடந்த ஆய்வில் மொத்தம் 3 கல்வெட்டுக்கள் இருப்பது தெரியவந்தது. ஒரு கல்வெட்டில் கோனேரின்மை கொண்டான் என்ற பெயரில் கல்வெட்டு காணப்படுகிறது. இந்த கல்வெட்டு பாண்டிய மன்னன் சடையவர்மன் குலசேகரனின் 12 வது ஆட்சியாண்டு கல்வெட்டு. இந்த கல்வெட்டில் இறைவனை ஆளுடைய ஈஸ்வரர் என குறிப்பிட்டுள்ளனர். இந்த ஊரை மையமாக கொண்டு, கொண்டாநகரம், பழவூர், நடுக்கல்லூர், கோடகநல்லூர், முக்கூடல் ஆகிய ஊர்களை இணைத்து குலசேகர சதுர்வேதி மங்கலம் என்ற பெயரில் ஒரு நகரம் நிர்மானிக்கப்பட்டு இருந்துள்ளது. இதன் காலம் 1202 மது ஆண்டாகும். அதாவது 823 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நகரம் செயல்பாட்டில் இருந்துள்ளது. இந்த நாடு பாண்டிய நாட்டின் மேல் வேம்பு நாட்டு பிரிவில் வருகிறது. இதில் சிவன் கோயிலில் மயிரந்தபுரத்தை சேர்ந்த வீரசிங்கதேவன் என்பவர் கோயிலில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நகரத்தில் அனைத்து சமுதாயத்தினரும் அனைத்து வகை தொழில் செய்வோரும் வசித்துள்ளனர். இவர்கள் கோயிலுக்கு வரி செலுத்தவேண்டும். இந்த வரியானது நகரத்தில் உள்ள மக்கள் மனை இறை, வெட்டிப்பாட்டம் பஞ்சு பீலி, சந்தி விக்ரக்பேறம், தறிஇறை, செக்கு இறை, தட்டொலிப்பாட்டம், தேவரடியார் சாட்டுவரி என எந்த தொழில் செய்தாலும் அவர்களும் வரி செலுத்தவேண்டும்.இந்த வரி முழுவதும் குலசேகரமுடையார் கோயிலுக்கு இறையிலி நிவந்தமாக வழங்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சடையவர்மன் குலசேகரன் பாண்டிய மன்னனின் பொறுப்பு மிகுந்த அரசியல் தலைவரான செம்பொன்மாரி நாட்டு குறுநில மன்னர்கள் மழவராயன் என்பவர் கோயிலில் தேவகன்மிகளுக்கு உரைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சிவன் கோயிலில் பணி செய்யும் மகளிர், ஆடல் மகளிர், பாடல் நிகழ்த்தும் பெண்கள் இவர்களுக்கு வருமானம் அதிகமாக இருந்தால் தேவர் அடியார் சாட்டு வரி செலுத்தவேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.