பதிவு செய்த நாள்
20
ஜன
2025
11:01
மேட்டுப்பாளையம்; அரங்கநாதர் கோவிலில் ராப்பத்து உற்சவத்தின், நிறைவு விழாவில், ஏலக்காய் மாலை அலங்காரத்தில் அரங்கநாத பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, கடந்த மாதம், 31ம் தேதி துவங்கியது. பத்து நாட்கள் பகல் பத்து உற்சவம் நடந்தது. இம்மாதம் பத்தாம் தேதி வைகுண்ட ஏகாதசி என்னும், சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அன்று இரவு ராப்பத்து உற்சவம் துவங்கியது. ஒவ்வொரு நாளும் அரங்கநாத பெருமாள், ஒவ்வொரு அவதார அலங்காரத்தில் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 19ம் தேதி இரவு ராப்பத்து உற்சவம் நிறைவு விழா நடந்தது.
ஞாயிற்றுக்கிழமை இரவு ராக் கால பூஜை முடிந்தபின், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், வெள்ளி சப்பரத்தில் வெண்பட்டு குடை சூழ, மேள வாத்தியங்கள் முழங்க, கோவிலில் வலம் வந்து சொர்க்கவாசல் வீதி வழியாக வெளியேறி, அவரோகன மண்டபத்தை அடைந்தார். அங்கு விஸ்வக் சேனர், ஆராதனம், லட்சுமி நாராயணர் ஆவாஹனம், புண்ணியாக வசனம், நவ கலச ஆவாஹனம் பஞ்ச சுத்த ஜபம் ஆகியவை நடைபெற்றது. பின்பு தேன், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களைக் கொண்டு, ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் ஸ்தலத்தார் வேதவியாசர் சுதர்சன பட்டர், திருமஞ்சன கட்டியம் அருளிப்பாடு நடந்து. மகா கலசத் தீர்த்தம், சங்கு சக்கர தாரத்துடன் திருமஞ்சனம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து கோவில் ஸ்தலத்தார் வேதவியாச பட்டர், திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஆகியோர் திருவாய்மொழி, ராமானுஜர் நூற்று அந்தாதி உபதேச ரத்தினமாலை ஆகிய பாசுரங்களை சேவித்தனர். அதைத்தொடர்ந்து ஏலக்காய் மாலை, ஸ்ரீரங்கம் ஆண்டாள் மாலை, ஸ்ரீதேவி, பூதேவி, அரங்கநாத பெருமாளுக்கு அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது . இந்த விழாவில் நம்மாழ்வருக்கு திருமஞ்சனம் பட்டாடை உடுத்தி பெருமாள் திருவடிகள் சேவிக்கும் வைபவம் திருவடி தொழுதல் நடந்தது. நம்மாழ்வருக்கு சடாரி மாலை மரியாதை செய்யப்பட்டது. நிறைவாக இயல் சாத்து சேவிக்கப்பட்டது. இந்த வைபவத்தில் அர்ச்சகர்கள், மிராசுதாரர்கள் ஆகியோர் பங்கேற்றனர். அறங்காவலர் குழுத் தலைவர் தேவ் ஆனந்த் மற்றும் அறங்காவலர்கள், செயல் அலுவலர் சந்திரமதி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.