வில்லியனூர் பெருமாள் கோவில் தேருக்கு சக்கரம் பொருத்தும் நிகழ்ச்சி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03டிச 2012 11:12
புதுச்சேரி: வில்லியனூர் பெருமாள் கோவிலுக்கு செய்யும் புதிய தேரில், சக்கரங்கள் பொருத்தப்பட்டன. வில்லியனூர் பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு ஸ்ரீபாலாஜி சம்ரக்ஷண டிரஸ்ட் சார்பில், 60 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய திருத்தேர் செய்யப்படுகிறது. நாற்பது அடி உயரத்திலும், 15 அடி அகலத்திலும், கலை வேலைப்பாடுகளுடன் தேர் தயாராகிறது. இத்தேருக்கு ஆறு அடி உயரத்திலும், ஒரு அடி அகலத்திலும் நான்கு சக்கரங்கள் செய்யப்பட்டுள்ளன. திருத்தேரில் சக்கரங்களை பொருத்தும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் காலை நடந்தது. விசேஷ பூஜைகள் செய்து தேருடன் சக்கரங்கள் பொருத்தப்பட்டன. பல்வேறு மரச் சிற்பங்கள் விரைவில் பொருத்தப்பட உள்ளன. விழா ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி ஹரிஹரி நமோ நாராயணா, ஸ்ரீபாலாஜி சம்ரக்ஷண டிரஸ்ட் விசுவநாதன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். திருத்தேர் பணிகளை விரைவாக முடித்து வரும் தை மாதத்தில் வெள்ளோட்டம் விட டிரஸ்ட் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.