பதிவு செய்த நாள்
03
டிச
2012
11:12
மயிலாடுதுறை: சீர்காழி அடுத்த கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள, நாகநாத சுவாமி கோவிலில், கேது பெயர்ச்சி விழா நேற்று நடந்தது.நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த கீழப்பெரும்பள்ளதில் சவுந்தரநாயகி சமேத நாகநாத சுவாமி கோவில் உள்ளது. இங்குள்ள தனி சன்னிதியில் நவகிரகங்களில் முதன்மையானவரான கேது பகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.ஞானகாரகனான,கேது பகவான் ஒன்றரை ஆண்டுக்கு ஒருமுறை, ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி பிரவேசிக்கிறார். அதன்படி நேற்று காலை, 10:53 மணிக்கு, கேது பகவான் ரிஷப ராசியிலிருந்து, மேஷ ராசிக்கு பிரவேசித்தார். கேது பெயர்ச்சியையொட்டி, நேற்று காலை கேது பகவானுக்கு, சிறப்பு பரிஹார ஹோமம், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 10:53 மணிக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டது.மீன் வளத்துறை அமைச்சர் ஜெயபால், நாகை கலெக்டர் முனுசாமி, சீர்காழி எம்.எல்.ஏ., சக்தி மற்றும் அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், உள்ளிட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து தோஷ பரிகாரம் செய்ய வேண்டிய மேஷம், ரிஷபம், கடகம், தனுசு, மகரம், மீனம், சிம்மம், கன்னி, துலாம் ராசியினர் கேது பகவானை தரிசித்து பரிகார ஹோமங்கள் செய்தனர். அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பூம்புகார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.