பதிவு செய்த நாள்
05
பிப்
2025
11:02
பிரயாக்ராஜ்: உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் இன்று (பிப்.,05) காலை 11 மணிக்கு பிரதமர் மோடி புனித நீராடினார்.
உ.பி.,யின் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மஹா கும்பமேளா நிகழ்வு ஜன., 13ல் துவங்கியது. வரும் 26 வரை இந்த நிகழ்வு நடக்கவுள்ள நிலையில், இன்று 74.70 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களும், இதுவரை 38.29 கோடிக்கும் அதிகமான பக்தர்களும் புனித நீராடி உள்ளனர். இந்நிலையில், இன்று பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். முன்னதாக பிரதமர் மோடி காலை 10:00 மணிக்கு பிரயாக்ராஜ் விமான நிலையம் வந்தார். அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நைனியில் உள்ள டில்லி பப்ளிக் பள்ளி மைதானத்தை அடைந்தார். காலை 10:45 மணிக்கு, அவர் அரேல் காட் சென்றடைந்தார். பின்னர் சங்கமத்திற்கு படகு சவாரி சென்றார். பின்னர் கும்பமேளா, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபாடு செய்தார். காலை 11:00 மணி முதல் 11:30 மணி வரை, மோடி சுமார் அரை மணி நேரம் கும்பமேளா நிகழ்வில் கலந்து கொண்டார். 144 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மஹா கும்ப மேளா, ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மற்றும் உலகம் முழுவதிலிருந்து கோடிக்கணக்கான பக்தர்களை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.