பதிவு செய்த நாள்
08
பிப்
2025
07:02
காஞ்சிபுரம்; பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற, 108 திவ்யதேசங்களில், 57 வது திவ்யதேசமாக விளங்கும் காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில், பரமேஸ்வர விண்ணகரம் என அழைக்கப்படுகிறது. தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள இக்கோவில் கும்பாபிஷேகம் கடைசியாக கடந்த 2007ம் ஆண்டு நடந்தது. இந்நிலையில் கோவில் கோபுரம் பொலிவிழந்த நிலையில் உள்ளது. எனவே, கோபுரத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க தொல்லியல் துறை முடிவு செய்தது. திருப்பணி துவங்க உள்ளதையொட்டி, கடந்த ஆண்டு அக்., மாதம் 21ம் தேதி கோவிலில் பாலாலயம் நடந்தது. இதையடுத்து தொல்லியல் துறையின், ரசாயண பொறியாளர் பிரிவு வாயிலாக கோவில் கோபுரங்களில் படிந்திருந்த பாசி மற்றும் துாசுகளை அகற்றி, பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து தொல்லியல் துறையின் ரசாயண பிரிவு அலுவலர் ஒருவர் கூறியதாவது: காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் சீரமைப்பு பணி, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் ரசாயண தன்மை இல்லாத நுரைப்பு எண்ணெயை கலந்து, அதை நுரைக்க வைத்து, இலகுவான பிரஷ் வாயிலாக துாய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும், கோபுரத்தின் மீது மழைநீர் படியாத வகையில் மெழுகு போன்ற படிமம் பூச்சு பூசப்படும். தற்போது 50 சதவீத பணி முடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.