படையெடுப்பில் சிதைக்கப்பட்ட சிவன் கோவில்; திருப்பணி செய்யும் கிராம மக்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2025 11:02
செஞ்சி; முன்னுாறு ஆண்டுகளுக்கும் மேலாக சிதிலமடைந்து இருக்கும் சோமசமுத்திரம் சோமநாதஈஸ்வரர் கோவிலை புதுப்பிக்க கிராம மக்கள் பாலாலய நிகழ்ச்சி செய்தனர்.
மூன்று மலைகளின் மீது அமைந்துள்ள செஞ்சி கோட்டையை ஒட்டி தொடர்ச்சியாக உள்ள மலை அடிவார கிராமங்களை விவசாயத்திற்கு மட்டுமின்றி, கோட்டைக்கான பாதுகாப்பு அரண்களாக மன்னர்கள் உருவாக்கி வைத்துள்ளனர். இந்த கிராம மக்களின் வழிபாட்டிற்காக மிகப்பெரிய கோவில்களை கட்டி உள்ளனர். இது போன்று செஞ்சி கோட்டையை சுற்றிலும் ஏராளமான கோவில்கள் இருந்தன. இவற்றை அன்னிய படையெடுப்புகளின் போது உடைத்து சேதப்படுத்தி விட்டனர். இது போன்று பல நுாறு ஆண்டுகள் பழமையான சோசமுத்திரம் சோமநாதஈஸ்வரர் கோவிலையும் உடைத்து சேதப்படுத்தி இருந்தனர். முன்னாறு ஆண்டுகளுக்கும் மேலாக சிதிலமடைந்து உள்ள இந்த கோவிலின் வெளியே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்த 150 ஆண்டுகளாக வழிபட்டு வந்தனர். தற்போது கோவிலை புதுப்பித்து திருப்பணி செய்ய கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கான பாலாலய நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை சிவாச்சாரியார்கள் காலச பிரதிஷ்டை செய்து கோபூஜை, புண்யாகவாசனம், கணபதி ஹோமம், விசேஷ திரவிய ஓமம் நடத்தி பாலாயனம் செய்தனர். இதில் சென்னை, புதுச்சேரி, செஞ்சி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.