பதிவு செய்த நாள்
06
டிச
2012
11:12
பல்வேறு மாவட்டங்களில், இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான, நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள், தனியார் பெயருக்கு, பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன, இதைக் கண்டறியும் பணி பிரமாண்டமானது.இவைகளை, மீண்டும் கோவில் பெயருக்கு பட்டா மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ள, உரிய நடவடிக்கை தேவை என்ற கருத்து, பரவலாக எழுந்திருக்கிறது. தனியார் பெயரில்:தமிழகத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்கு, சொந்தமாக, பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில், வாடகைக்கு இருந்தவர்கள், குத்தகைக்கு எடுத்தவர்கள், முறைகேடான வகையில், சூழ்நிலையை சாதகமாக்கி, தங்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்துள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை, தற்போது, அந்தந்த மாவட்ட வருவாய்துறை மூலம், கோவில் நிலங்களை, கோவில் பெயரில் பட்டா மாற்றம் செய்யும் வேலைகளில் ஈடுபட்டு வந்தது. சமீபகாலமாக இப்பணியில் கடும் மந்தம் ஏற்பட்டு வருகிறது.
தொய்வு:ஆரம்பத்தில், தனியார் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்ட நிலங்கள் குறித்து, ஆராய்ந்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சமீபகாலத்தில், இப்பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. தற்போது அந்நிலங்களை மீட்டு, மீண்டும் குத்தகைக்கு விட்டால், வருடத்திற்கு பல கோடி ரூபாய் வருமானம் வரும். கோவில் நிலங்களை பல தலைமுறைகளாக வைத்திருப்போர், உழவு செய்ய முடியாத அல்லது அந்த ஊரை விட்டு வெளியேறும் போது, வேறு சிலரிடம் ஒப்படைத்தது உண்டு. அது, காலப்போக்கில் தனித் தனி குடும்பங்களுக்கு சொந்த நிலமாக மாறிவிட்டது. ஆனால், இப்போது கோவில்களுக்கு உள்ள சொத்துக்களை பட்டியலிட்டால், அதில் காணாமல் போன சொத்துக்கள் ஏராளம். தற்போது அதன் உரிமையாளர்களாக இருப்பவர்கள், ஏற்கனவே தாங்கள் அந்த சொத்தை வாங்கும் போது தந்த பணம், அது தற்போதைய மதிப்பில் என்ன விலை என்று கணக்கிட்டால், அது பல ஆயிரம் கோடி ரூபாய்களாக வரும்.இதை கணக்கீடு செய்யும் முறை முழுவீச்சில் நடத்தப்பட இந்து சமய அறநிலையத்துறையில் இருக்கிறதா அல்லது அதற்கேற்ற சட்ட நெறிமுறைகள் இந்து அறநிலையத்துறையிடம் இருக்கிறதா என்பதை யாரும் விளக்க முன்வரவில்லை. ஆந்திராவில் கோவில் சொத்து, மற்றவர்களிடம் சேர முடியாத வகையில் சட்ட நடைமுறைகள் உள்ளன. நில மதிப்பு அதிகரித்த நிலையில், இதற்கான ஒழுங்குமுறையை உருவாக்காத பட்சத்தில், கோவில் சொத்தை அனுபவிப்பவர்கள் காட்டில் நல்ல மழை தான்.