பதிவு செய்த நாள்
06
டிச
2012
11:12
நகரி: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்க வாசல் திறப்பு தரிசனம் தொடர்பாக, தேவஸ்தானம் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. தரிசன டிக்கெட்டிற்கு முன்பதிவு பற்றிய அறிவிப்பை பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.திருமலை கோவிலில், வரும் 23ம் தேதி, வைகுண்ட ஏகாதசி, 24ம் தேதி துவாதசியையொட்டி, பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்படும். சொர்க்க வாசல் தரிசனத்தில் பங்கேற்க, நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஏகாதசி, துவாதசி ஆகிய இரு நாட்களிலும் ஒன்றரை லட்சம் பக்தர்கள் வரையில் சொர்க்க வாசல் தரிசனம் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது.கடந்த ஆண்டு, வைகுண்ட ஏகாதசியையொட்டி, தேவஸ்தானம் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தது. 20 நாட்களுக்கு முன்பே, நாடு முழுவதும் உள்ள தேவஸ்தான தகவல் மையங்கள் மூலம், 300 ரூபாய் மற்றும் பாதயாத்திரை பக்தர்களுக்கு, 100 ரூபாய் டிக்கெட் வினியோகிக்கப்பட்டது. இந்த டிக்கெட் வாங்கியவர்கள் தரிசனம் செய்வதற்காக, விரிவான ஏற்பாடுகளை செய்து இருந்தது.இந்த தரிசனத்தில் பங்கேற்றவர்கள் பலரும், தேவஸ்தானம் செய்திருந்த ஏற்பாட்டை பாராட்டி இருந்தனர். மேலும், அனைத்து பக்தர்களின் தரிசன வசதிக்காக, வி.வி.ஐ.பி.,- வி.ஐ.பி.,க்கள் திருமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என கோவில் தேவஸ்தான அறிவிப்பு வெளியிட்டது. இதையும் மீறி, குவிந்து விட்ட வி.ஐ.பி.,களுக்கு, தேவஸ்தான அதிகாரிகள் முன்னிலை வழங்கவில்லை என, ஆந்திராவைச் சேர்ந்த எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் புகார் தெரிவித்தனர். இதன் காரணமாக, இந்த ஆண்டு சொர்க்க வாசல் தரிசனத்திற்கு தேவஸ்தான நிர்வாகம் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. கடந்த ஆண்டு போல் முன்பதிவு இல்லாததால், வைகுண்டா ஏகாதசிக்கு, திருமலைக்கு வரும் பக்தர்கள் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.