சென்னை; சென்னை, வியாசர்பாடி, ரவீஸ்வரர் கோவிலில், 1.38 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட குளத்தை, பக்தர்கள் பயன்பாட்டிற்கு, அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
பின், அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவில் குளம், 1.38 கோடி ரூபாயில் புனரமைக்கப்பட்டு, பக்தர்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. அந்த கோவில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதன் காரணமாக சாலை மட்டம் உயர்ந்து, கோவில் ஆறடிக்கு கீழ் சென்றது. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, கோவிலை, 1.38கோடி ரூபாய் செலவில், கோவிலை உயர்த்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்து, வரும் ஜூனிற்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும். அதேபோல, சென்னையில் கற்கோடி அம்மன், சுப்பிரமணியசாமி, திரவுபதி அம்மன், சைதாப்பேட்டை வீர ஆஞ்சநேயர் உள்ளிட்ட, 20 கோவில்கள், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தரை மட்டத்திலிருந்து உயர்த்தும் பணிகள் நடக்கின்றன. மன்னர்கள் காலத்தில் நடந்த திருப்பணிகளுக்கு நிகராக, இந்த ஆட்சியில் திருப்பணிகள் நடக்கின்றன. இதுவரை, நான்கு கோடி ரூபாயில், நான்கு கோவில்களில் புதிய குளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், 220 கோவில்களின் குளங்கள், 120 கோடி ரூபாயில் புனரமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், ஐ.சி.எப்., பகுதியில் அமைந்துள்ள கமல விநாயகர் கோவில், 90 லட்சம் ரூபாயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதற்கான பாலாலயம் நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் பிரியா, பெரம்பூர் தி.மு.க., – எம்.எல்.ஏ., சேகர், அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் திருமகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.