பதிவு செய்த நாள்
18
பிப்
2025
10:02
ஓசூர்; சந்திரசூடேஸ்வரர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்லக்கு உற்சவத்தில் குளிரையும் பொருட்படுத்தாமல் விடிய விடிய கண்டு பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஓசூரில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ மரகதாம்பிகை உடனுரை ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் தேர்த்திருவிழா வரும் மார்ச் மாதம் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்த்திருவிழாவிற்கு முன்னதாக ஓசூரில் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் திருக்கோயில் பல்லக்கு உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம், அந்த வகையில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசந்திரசூடேஸ்வரர், ஸ்ரீமரகதாம்பிகை அம்மன், ஸ்ரீகோட்டை மாரியம்மன், ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி, முருகன், தர்மராஜா, ராமர், கிருஷ்ண சாமி, துர்க்கை அம்மன், காளி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட ஊர் காவல் தெய்வங்கள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் வைத்து ஓசூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டது. மேள, தாள வாத்தியங்கள், நையாண்டி மேள ஆட்டம், வான வேடிக்கைகளுடன் ஒசூர் நகரில் தாலுகா அலுவலக சாலை, நேதாஜி சாலை, ஏரி தெரு, ராம்நகர், பெரியார் நகர், எம் ஜி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக பல்லக்கு ஊர்வலம் விடிய, விடிய நடந்தது. அப்போது பக்தர்கள் காவல் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். இந்த பல்லக்கு உற்சவத்தில் ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குளிரையும், பனியையும் பொருட்படுத்தாமல் பல்லக்கு உற்சவம் மற்றும் கரக ஆட்டத்தை கண்டு மகிழ்ந்தனர்.