பதிவு செய்த நாள்
18
பிப்
2025
10:02
சென்னை; ஐந்து ஆண்டு நீண்டஇடைவெளிக்கு பிறகு, ஸ்ரீ மாதா அம்ருதானந்தமயி தேவி தனது தென்னிந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக சென்னைக்கு விஜயம் செய்துள்ளார். அவருக்கு பாரம்பரிய பூர்ண கும்ப மரியாதைகளுடன் சுவாமி வினயாம்ருதானந்தபுரி சென்னை பக்தர்களின் சார்பில் வரவேற்றார். அம்மாவுடன் ஆயிரக்கணக்கான துறவிச்சீடர்கள், பிரம்மச்சாரிகள் மற்றும் ஆசிரம வாசிகள் சென்னை வந்தனர். இதனை அடுத்து விருகம்பாக்கத்தில் 1990-ஆம் ஆண்டு அம்மாவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிரம்மஸ்தான ஆலயத்தின் 35-வது பிரம்மஸ்தான மஹோத்சவமானது வெகு சிறப்பாக நடைபெற்றது.
நேற்று பிப்ரவரி 17ம் தேதி, காலை 11:00 மணிக்கு, மேடைக்கு வருகைத் தந்த அம்ருதானந்தமயி, பக்தர்களுக்கு தமது அன்பு கலந்த அரவணைப்பு மற்றும் ஆசியை வழங்கினார். விழாவில் அருளுரை மற்றும் பஜனைகள் இடம்பெற்றது. இரண்டு நாட்கள் நடைபெறவிருக்கும் இவ்விழாவில் சனி மற்றும் ராகு தோஷ நிராவண பூஜைகள் பிரம்மஸ்தான ஆலயத்தில் நடைபெறுகிறது. சிறப்பு விருந்தினர்களின் சம்பிரதாய வரவேற்புடன் இந்நிகழ்வு தொடங்கியது. அனைத்து பக்தர்களுக்கும் இலவச உணவு (அன்னதானம்) வழங்குவது உட்பட பெரிய கூட்டத்திற்கு இடமளிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து பிப்ரவரி 20- ஆம் தேதி மாலை 6 மணியளவில், கரூர் செம்மடையில் அமைந்துள்ள அம்ருதாவித்யாலயம் பள்ளி வளாக மைதானத்தில் நடைபெறவிருக்கும் பொது நிகழ்ச்சிக்கு அம்மா விஜயம் செய்ய உள்ளார். அங்கு அம்மாவின் அருளுரை, தியானம், பஜனை மற்றும் தரிசன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
அருளாசி : விருகம்பாக்கத்தில், 1990ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட பிரம்மஸ்தான ஆலயத்தின், 35வது மகோற்சவத்தில் பங்கேற்ற அம்ருதானந்தமயி பக்தர்களுக்கு அருளாசி வழங்கியதாவது: இங்கு இதயங்களின் ஒற்றுமையைக் காண முடிகிறது. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான ஒரு குறுகிய இடைவெளியே வாழ்க்கை. நம் செயல்கள் நல்லதாக இருக்கும்போதுதான், வாழ்க்கை அர்த்தம் உள்ளதாகிறது. மூன்று விஷயங்கள் மனிதகுலத்தை வளர்க்கத் துாண்டுகிறது. அது கூட்டுறவு, தோழமை மற்றும் ஒற்றுமை. சக மனிதர்களுடன் ஒத்துழைத்து, இயற்கையுடன் கூட்டுறவாக இருந்து, இறைவனுடன் இணக்கமாக வாழ வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். மனிதகுலம் பல தலைமுறைகளாக இயற்கையை துன்புறுத்துகிறது. இயற்கை மனிதகுலத்தை மன்னித்து வருகிறது. ஆனால், இது இனி தொடராது. இயற்கை அன்னையின் சக்தியை நாம் மறந்துவிட்டோம். எனவே, இயற்கையிடம் பணிவுடன் தலை வணங்கக் கற்றுக்கொள்வோம்.மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டங்கள் உள்ளன.
உலகளாவிய சக்தியால் நமக்கு வழங்கப்பட்ட தெய்வீக சட்டத்தை நாம் தர்மம் என்று அழைக்கிறோம். தண்டனைக்கு பயப்படுவதால் மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டங்களை மீறாமல் இருக்க முயற்சிக்கிறோம். தர்ம சட்டத்தை மீறுவதும் விளைவுகளை ஏற்படுத்தும். பிரபஞ்சத்தின் சட்டமான தர்மத்தை மாற்றவோ, திருத்தவோ முடியாது.
முயற்சிக்க வேண்டும்: மனிதன் பறவை போல பறக்கவும், மீனைப் போல நீந்தவும் கற்றுக்கொள்கிறான். ஆனால், ஒரு மனிதனைப் போல நடக்கவும், வாழவும் மறந்துவிட்டான். ஆமை எங்கு ஊர்ந்து சென்றாலும், அது மணலில் ஒரு தடயத்தை விட்டுச் செல்கிறது. அதேபோல, நாம் இந்த உலகத்தை விட்டுச் செல்லும்முன், ஒரு அடையாளத்தை விட்டுச் செல்ல முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அருளாசி வழங்கினார்.