மேல்சித்தாமூர் பார்சுவநாதர் கோவிலில் பழமையான ஓவியங்கள் பாதுகாக்கப்படுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2012 11:12
செஞ்சி: மேல்சித்தாமூர் பார்சுவநாதர் ஜெயின் கோவிலில் உள்ள பழமையான ஓவியங்களை பாதுகாக்க தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். செஞ்சி தாலுகா மேல்சித்தாமூரில் மிகப்பழமையான பார்சுவநாதர் ஜெயின் கோவில் உள்ளது. இந்த கோவிலை இங்குள்ள ஜீனகஞ்சி மடத்தின் மூலம் நிர்வகித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள ஜெயின் கோவில்களில் மிக முக்கியமான கோவிலாக இக்கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு ஆண்டு முழுவதும் வட நாட்டு யாத்ரீகர்களும், ஜைன முனிவர்களும் வருகை தருகின்றனர். பழமையான இக்கோவிலின் மூலவர் கோபுரத்தின் உள் பகுதியிலும், பிரம்மதேவர், கணதரர், ஜீனவாணி, பத்மாவதி, ஜேலாமாலினி சன்னதிகளின் முன்மண்டபத்தின் மேல் பகுதியிலும் பழமையான ஓவியங்களை வரைந்துள்ளனர். தஞ்சை ஓவியங்களை போல் உள்ள இந்த ஓவியங்கள் பல நூறு ஆண்டுகள் பழமையானவை. ஜைன மதத்தின் தத்துவங்கள், தீர்த்தங்கரர்களின் வரலாறு, மடாதிபதிகளின் வாழ்க்கை பற்றி ஓவியங்களாக வரைந்துள்ளனர். இந்த ஓவியங்களை சுண்ணாம்பு பூச்சுக்களால் ஆன சுவற்றில் வரைந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பழமை காரணமாக ஓவியங்கள் வரைந்துள்ள சுண்ணாம்பு பூச்சுக்கள் உதிர்ந்து வருகின்றன. இதனால் பழமையான ஓவியங்கள் வேகமாக சிதைந்து வருகின்றன. போதிய நிதி வசதி இல்லாமல் மடத்தின் மூலம் இந்த ஓவியங்களை பாதுகாக்க முடியாத நிலை உள்ளது. வரலாற்று தடயங்களையும், புராதன சின்னங்களையும் பாதுகாத்து வரும் தொல்லியல் துறையினர், இந்த ஓவியங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.