பதிவு செய்த நாள்
06
டிச
2012
11:12
குளித்தலை: அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் மலை கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குளித்தலை அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் மலைக்கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில், திங்கட்கிழமைதோறும் சோமவாரம் நிகழ்ச்சியும், சித்திரை மாதத்தில் கிரிவல நிகழ்ச்சிகளும் நடக்கும், இதில் பங்கேற்க பல மாவட்டத்திலிருந்து, பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். மேலும், முக்கிய விசேஷ நாட்களில் பக்தர்கள், 1,117 படிகள் மலையேறி ஸ்வாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த வாரம் திங்கட்கிழமை, மூன்றாம் சோவாரம் நிகழ்ச்சியில், பல்வேறு மாவட்டத்திலிருந்து பக்தர்கள், குடிப் பாட்டுக்காரர்கள், சுற்றுலா பயணிகள் உள்பட, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு வந்தனர். ஆனால், கோவில் அமைந்துள்ள பகுதியில் கழிப்பறை வசதி இல்லாததாலும், கோவிலின் சுற்றுப்புற பகுதிகள் மிக அசுத்தமாகவும் இருந்ததாலும், ஸ்வாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் பெரும் சங்கடத்தில் நெளிந்தனர். குடிநீர் வசதி இல்லாததால், பக்தர்கள் காசு கொடுத்து, வேறு பகுதியில் குடிநீர் பாட்டில்களை வாங்கி பயன்படுத்தினர். எனவே, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில், பக்தர்கள் வசதிக்காக, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி செய்து தர, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.